"பாப்பான்" என்றால் மலையாள நாட்டில் யானைப் பாகன். "பார்ப்பான்" என்றால் பழந்தமிழ் நாட்டில் காதலர் இருவரைக் களவு ஒழுக்கத்தில் சேர்த்து வைப்பவன். துணை புரிபவன். தூது செல்பவன். உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், சுஜாதா ரங்கராச அய்யங்காரையே கேளுங்கள். அவர்தான் சங்கப் பாடல்களுக்கு "நன்னா" உரை எழுதியிருப்பதாகப் பீற்றிக் கொண்டாரே!
"பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு அளவியன் மரபின், அறு வகையோரும் களவினில் கிளவிக்கு உரியர் என்ப" என்று தொல்காப்பியச் சூத்திரம். (பொருள்: 181)
நடிகவேள் ஒரு சமூக நாடகத்தில் வசனம் பேசுவார். 'வாடா, கோணி ஊசி' என்பார். 'அது என்னங்க, கோணி ஊசின்னு என்னைக் கூப்பிடறீங்க?' என்பார் அந்த நடிகர். 'சாக்குப் பையின் இரண்டு பக்கத்தையும் கோணி ஊசியால் தைக்கிறாங்க, இல்லியா? அதுபோல அவனையும் அவளையும் சேர்த்து வைக்கத் தூது போற ஆளாச்சே, நீ, அதான் உன்னைக் கோணி ஊசின்னு கூப்பிட்டேன்' என்று நடிகவேள் பதில் கூறுவார்.
அப்படிக் கோணி ஊசிதான் பார்ப்பான் என்கிறது, தொல்காப்பியம்!
அந்தச் சொல் இழிவானதா? அல்லவே! ஏன் கோபம் வருகிறது நாராயணன் கூட்டிய மாநாட்டுக்காரர்களுக்கு? இலக்கியச் சொல். இலக்கியங்களில் இடம் பெற்ற சொல்.
'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' எனப் பாடினார் சுப்ரமணிய பாரதி. அதிலே 'மாமுது பார்ப்பான்' என்று தானே வருகிறது? நாம் எழுதும்போது மட்டும் ஏன் கோபம்?
"பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்" என்று - காஞ்சிபுரம் சங்கராச்சாரிக்குச் சொன்னதைப் போல - வள்ளுவம் கூறுகிறதே! நாம் கூறினால் ஏன் கோபம்?’ "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட" எனப் பாரதி பாடியதால் வள்ளுவர்மீது கோபம் கிடையாதோ?
'ஆவும் ஆன் இயல் பார்ப்பனமாக்களும்' என்று புறநானூற்றுப் பாடல் 9 கூறுகிறதே!
புறப்பாடல் 34-இல் 'பார்ப்பார்த் தப்பிய கொடுமை' என வருகிறதே!
'ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து’’
என்று எங்களவரின் ஏமாளித்தனத்தைப் படம் பிடித்து புறநானூற்றுப் பாடல் 367 கூறுகிறதே, கோபம் வரவில்லையே! ஏன்? தாரைவார்த்துப் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்ததால் இனிக்கிறதோ?
யாகம் என்றால் என்ன என்றே அறியாத பார்ப்பானை 'வேளாப் பார்ப்பான்' என்று அகநானூறு பாடல் 24 கூறுகிறதே, கோபம் இல்லையோ?
'தண்டொடு பிடித்த தாழ்க மண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே' என்று குறுந்தொகை (156) கூப்பிடுகிறதே, கோபம் இல்லையே! நாம் கூப்பிட்டால் ஏன் கோபம்?
மூங்கில் கோல் ஒன்று பிடித்து, வாத்து மேய்ப்பார் போல ஊரூருக்குப் போய்க் கோர்ட்டும் கையுங்கழியுமாய் அலையும் காஞ்சி சங்கராச்சாரிகளின் முன்னோர் கல்லில் அடித்துத் தோய்த்த ஈரத் துணியைக் காயப் போடுவதற்காக மூன்று குச்சிகளின் மீது போர்த்தியிருந்ததை முல்லைப் பாட்டு பாடுகிறதே!
"கல்தோய்த்து உடுத்த, படிவப் பார்ப்பான்முக்கோல் அசைநிலை கடுப்ப" என்று பாடுகிறதே! கோபம் கொள்ளக் காணோமே! நாம் பாடினால் மட்டும் ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது?
ஈராயிரம் ஆண்டாக வழங்கி வரும் சொல்லை நாங்கள் எழுதினால், கையை வெட்டி விடுவீர்களோ?முடியுமா?
நாங்கள் எப்படி 'பிராமணன்' என்று எழுதுவோம்? உங்களை 'பிராமணன்' என்று அழைத்தால் -நாங்கள் எங்களை 'சூத்திரன்' என்று ஒப்புக் கொண்டதாக ஆகுமே! சூத்திரன் என்றால் கேவலமான பொருள் கூறுகிறீர்களே! எப்படி நாங்கள் ஒப்ப முடியும்? யார்தான் தம் தாயைக் கேவலப்படுத்திடச் சம்மதிப்பார்கள்?
'பேராசைக்காரனடா பார்ப்பான் நம்மைப் பிய்ச்சுப் பணம் கொடு எனத் தின்பான்' என்று பார்ப்பனக் கவிஞரான பாரதியே கையாண்ட சொல்லை நாங்கள் கையாண்டால் மட்டும், வெட்டுவீர்களோ?
பார்ப்பனர் தெருவில் எம் ஜாதிக்காரன் மலம் எடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்! நாங்கள் உங்களை உங்கள் இயற்பெயர் கூறிக் கூப்பிடக் கூடாதோ? கூறினால் குத்துவீர்களோ?
ஆத்திரத்தால் அறிவிழந்து போகாதவர்கள் யாராவது அக்கிரகாரத்தில் இருந்தால், ஆற அமர யோசித்துப் பார்க்கட்டும்!
உங்களை இரு பிறப்பாளர் என்று (புறநானூறு 347). சங்க நூல் எழுதுகிறது. நீங்கள் எழுதி வைத்துக் கொண்டிருக்கும் சாத்திரக் கருத்து சங்கப்பாடலில்! இது ஒன்றும் இழிவானது அல்ல. ஆனால் எங்களை -
"இழிசினன், இழி பிறப்பாளன்" என்று கேவலப்படுத்தி அதே சங்கப் பாடல்களில் ஏழு, எட்டு இடங்களில் எழுதப்பட்டுள்ளதே! தாமோதரன் எழுதிய பாடல் எனும்போதே, உங்களின் கருத்துக் கலப்பு ஏற்பட்டு விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறதே! நாங்கள் 'வெட்டுவோம்' என்று சொன்னால் அறிவுடைமை ஆகுமா? நாங்கள் செய்ய மாட்டோம்!
நாங்கள் இழி பிறப்பினர் அல்லர் என்பதைக் கருத்துக் களத்தில் மோதி எங்கள் அறிவு ஆசான் பெரியார் அவர்களின் அறிவு வழிப்பாதையில் போரிட்டு எண்பித்து மனிதர்களாகியிருக்கிறோம்!
அறிவு வழியில் வாருங்கள். அரிவாளைத் தூக்காதீர்கள். வாளெடுத்தவன் வாளாலேயே மடிவான். படித்ததில்லையா?
'ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்று முதிர் வடவரை... வெஞ்சின வேந்தரைப் பிணித்த' எங்களைப் பற்றிப் பரணர் பாடியிருப்பதைப் படித்ததில்லையா? (அகநானூறு. 396)
உங்கள் முன்னோரை அடிபணியச் செய்த எங்களைப் "பேரிசை மரபின் ஆரியர் வணக்கி" என்று பதிற்றுப்பத்துப் பதிகம் பாடுவதை அறிய மாட்டீர்களா? அறிந்துமா ஆர்ப்பாட்டம்?
மூர்க்கத்தனமாகச் செயல்படுவது விலங்குகளுக்கு வாடிக்கை. மன வலிமையுடன் கருத்துகளை வெளிப்படுத்திக் கருத்துப் போர் புரிவதுதான் மனிதனின் வலு. ஏன் இது உங்களுக்குப் புரியவில்லை?
நன்றி:
விடுதலை