3.12.2006

விஞ்ஞானமும் மெய்ஞானமும்




























மெய்ஞானத்தின் கோலம் கண்டு
விஞ்ஞானம் தலை குனிந்ததோ?

அல்லது

விஞ்ஞானமே எனினும்
மெய்ஞானத்தின் முன்
தலை குனிந்தே ஆக
வேண்டுமென்ற ஏளனச் சிரிப்போ?

படம் உதவி: காஞ்சி பிலிம்ஸ் - நன்றி

2.26.2006

பார்ப்பானும் இலக்கியங்களும்

"பாப்பான்" என்றால் மலையாள நாட்டில் யானைப் பாகன். "பார்ப்பான்" என்றால் பழந்தமிழ் நாட்டில் காதலர் இருவரைக் களவு ஒழுக்கத்தில் சேர்த்து வைப்பவன். துணை புரிபவன். தூது செல்பவன். உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், சுஜாதா ரங்கராச அய்யங்காரையே கேளுங்கள். அவர்தான் சங்கப் பாடல்களுக்கு "நன்னா" உரை எழுதியிருப்பதாகப் பீற்றிக் கொண்டாரே!

"பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு அளவியன் மரபின், அறு வகையோரும் களவினில் கிளவிக்கு உரியர் என்ப" என்று தொல்காப்பியச் சூத்திரம். (பொருள்: 181)

நடிகவேள் ஒரு சமூக நாடகத்தில் வசனம் பேசுவார். 'வாடா, கோணி ஊசி' என்பார். 'அது என்னங்க, கோணி ஊசின்னு என்னைக் கூப்பிடறீங்க?' என்பார் அந்த நடிகர். 'சாக்குப் பையின் இரண்டு பக்கத்தையும் கோணி ஊசியால் தைக்கிறாங்க, இல்லியா? அதுபோல அவனையும் அவளையும் சேர்த்து வைக்கத் தூது போற ஆளாச்சே, நீ, அதான் உன்னைக் கோணி ஊசின்னு கூப்பிட்டேன்' என்று நடிகவேள் பதில் கூறுவார்.

அப்படிக் கோணி ஊசிதான் பார்ப்பான் என்கிறது, தொல்காப்பியம்!

அந்தச் சொல் இழிவானதா? அல்லவே! ஏன் கோபம் வருகிறது நாராயணன் கூட்டிய மாநாட்டுக்காரர்களுக்கு? இலக்கியச் சொல். இலக்கியங்களில் இடம் பெற்ற சொல்.

'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' எனப் பாடினார் சுப்ரமணிய பாரதி. அதிலே 'மாமுது பார்ப்பான்' என்று தானே வருகிறது? நாம் எழுதும்போது மட்டும் ஏன் கோபம்?

"பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்" என்று - காஞ்சிபுரம் சங்கராச்சாரிக்குச் சொன்னதைப் போல - வள்ளுவம் கூறுகிறதே! நாம் கூறினால் ஏன் கோபம்?’ "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட" எனப் பாரதி பாடியதால் வள்ளுவர்மீது கோபம் கிடையாதோ?

'ஆவும் ஆன் இயல் பார்ப்பனமாக்களும்' என்று புறநானூற்றுப் பாடல் 9 கூறுகிறதே!

புறப்பாடல் 34-இல் 'பார்ப்பார்த் தப்பிய கொடுமை' என வருகிறதே!

'ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து’’

என்று எங்களவரின் ஏமாளித்தனத்தைப் படம் பிடித்து புறநானூற்றுப் பாடல் 367 கூறுகிறதே, கோபம் வரவில்லையே! ஏன்? தாரைவார்த்துப் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்ததால் இனிக்கிறதோ?

யாகம் என்றால் என்ன என்றே அறியாத பார்ப்பானை 'வேளாப் பார்ப்பான்' என்று அகநானூறு பாடல் 24 கூறுகிறதே, கோபம் இல்லையோ?

'தண்டொடு பிடித்த தாழ்க மண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே' என்று குறுந்தொகை (156) கூப்பிடுகிறதே, கோபம் இல்லையே! நாம் கூப்பிட்டால் ஏன் கோபம்?

மூங்கில் கோல் ஒன்று பிடித்து, வாத்து மேய்ப்பார் போல ஊரூருக்குப் போய்க் கோர்ட்டும் கையுங்கழியுமாய் அலையும் காஞ்சி சங்கராச்சாரிகளின் முன்னோர் கல்லில் அடித்துத் தோய்த்த ஈரத் துணியைக் காயப் போடுவதற்காக மூன்று குச்சிகளின் மீது போர்த்தியிருந்ததை முல்லைப் பாட்டு பாடுகிறதே!

"கல்தோய்த்து உடுத்த, படிவப் பார்ப்பான்முக்கோல் அசைநிலை கடுப்ப" என்று பாடுகிறதே! கோபம் கொள்ளக் காணோமே! நாம் பாடினால் மட்டும் ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது?

ஈராயிரம் ஆண்டாக வழங்கி வரும் சொல்லை நாங்கள் எழுதினால், கையை வெட்டி விடுவீர்களோ?முடியுமா?

நாங்கள் எப்படி 'பிராமணன்' என்று எழுதுவோம்? உங்களை 'பிராமணன்' என்று அழைத்தால் -நாங்கள் எங்களை 'சூத்திரன்' என்று ஒப்புக் கொண்டதாக ஆகுமே! சூத்திரன் என்றால் கேவலமான பொருள் கூறுகிறீர்களே! எப்படி நாங்கள் ஒப்ப முடியும்? யார்தான் தம் தாயைக் கேவலப்படுத்திடச் சம்மதிப்பார்கள்?

'பேராசைக்காரனடா பார்ப்பான் நம்மைப் பிய்ச்சுப் பணம் கொடு எனத் தின்பான்' என்று பார்ப்பனக் கவிஞரான பாரதியே கையாண்ட சொல்லை நாங்கள் கையாண்டால் மட்டும், வெட்டுவீர்களோ?

பார்ப்பனர் தெருவில் எம் ஜாதிக்காரன் மலம் எடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்! நாங்கள் உங்களை உங்கள் இயற்பெயர் கூறிக் கூப்பிடக் கூடாதோ? கூறினால் குத்துவீர்களோ?

ஆத்திரத்தால் அறிவிழந்து போகாதவர்கள் யாராவது அக்கிரகாரத்தில் இருந்தால், ஆற அமர யோசித்துப் பார்க்கட்டும்!

உங்களை இரு பிறப்பாளர் என்று (புறநானூறு 347). சங்க நூல் எழுதுகிறது. நீங்கள் எழுதி வைத்துக் கொண்டிருக்கும் சாத்திரக் கருத்து சங்கப்பாடலில்! இது ஒன்றும் இழிவானது அல்ல. ஆனால் எங்களை -

"இழிசினன், இழி பிறப்பாளன்" என்று கேவலப்படுத்தி அதே சங்கப் பாடல்களில் ஏழு, எட்டு இடங்களில் எழுதப்பட்டுள்ளதே! தாமோதரன் எழுதிய பாடல் எனும்போதே, உங்களின் கருத்துக் கலப்பு ஏற்பட்டு விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறதே! நாங்கள் 'வெட்டுவோம்' என்று சொன்னால் அறிவுடைமை ஆகுமா? நாங்கள் செய்ய மாட்டோம்!

நாங்கள் இழி பிறப்பினர் அல்லர் என்பதைக் கருத்துக் களத்தில் மோதி எங்கள் அறிவு ஆசான் பெரியார் அவர்களின் அறிவு வழிப்பாதையில் போரிட்டு எண்பித்து மனிதர்களாகியிருக்கிறோம்!

அறிவு வழியில் வாருங்கள். அரிவாளைத் தூக்காதீர்கள். வாளெடுத்தவன் வாளாலேயே மடிவான். படித்ததில்லையா?

'ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்று முதிர் வடவரை... வெஞ்சின வேந்தரைப் பிணித்த' எங்களைப் பற்றிப் பரணர் பாடியிருப்பதைப் படித்ததில்லையா? (அகநானூறு. 396)

உங்கள் முன்னோரை அடிபணியச் செய்த எங்களைப் "பேரிசை மரபின் ஆரியர் வணக்கி" என்று பதிற்றுப்பத்துப் பதிகம் பாடுவதை அறிய மாட்டீர்களா? அறிந்துமா ஆர்ப்பாட்டம்?

மூர்க்கத்தனமாகச் செயல்படுவது விலங்குகளுக்கு வாடிக்கை. மன வலிமையுடன் கருத்துகளை வெளிப்படுத்திக் கருத்துப் போர் புரிவதுதான் மனிதனின் வலு. ஏன் இது உங்களுக்குப் புரியவில்லை?

நன்றி: விடுதலை

2.20.2006

கலவை மடத்தில் கர்ப்பமான பெண்!

வேலூர் மாவட்டம் கலவையில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் வேலை பார்த்த ஒரு பெண் முறைகேடாக கர்ப்பமாகி, குழந்தையும் பெற்றுள்ளார். அவரை மடத்தில் பணியாற்றும ஒருவரே கர்ப்பமாக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் இப்போது காஞ்சி மட வழக்குகளை விசாரிக்கும் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீமிடம் போயுள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பிராமணப் பெண் கலவை மடத்தில் சமையல் வேலை பார்த்து வந்தார். இந் நிலையில் அவர் கர்ப்பமானார். அவரை அங்கு வேலை பார்க்கும் ஒருவரே கர்ப்பிணியாக்கியதாகத் தெரிகிறது.
இது குறித்து ஜெயேந்திரரிடம் அந்தப் பெண் புகார் கூறியதாகவும், யார் கர்ப்பம், யார் கர்ப்பமில்லைன்னு பார்க்கிறது தான் என் வேலையா என்று விவகாரத்தை கைகழுவினாராம் ஜெயேந்திரர்.

இந் நிலையில் குழந்தையும் பெற்றுவிட்ட அந்தப் பெண், புகாரை காஞ்சி மட வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் டீமின் பார்வைக்குக் கொண்டு சென்றுவிட்டார்.

தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஜெயேந்திரர் ஏதாவது வாய் திறந்தால், இந்த வழக்கிலும் ஜெயேந்திரர் இழுத்துவிடப் படலாம் என்று தெரிகிறது. இதனால் பயங்கர டென்சனில் இருக்கிறாராம் சங்கராச்சாரியார்.

நன்றி

1.27.2006

பாரம்பர்யமும் மனிதநேயமும்

வீரம் என்பதற்கான விளக்கமே கூட மாறுபடக் கூடிய காலம் இது. இந்தக் கால கட்டத்தில் மனிதன் விலங்குடன் சண்டை போட்டு வெற்றி பெறுவது வீரம் என்று நினைக்க முடியாது. ஜல்லிக்கட்டு என்று சொல்லி, மதுரை, சேலம் போன்ற மாவட்டப் பகுதிகளில் சீறிப் பாயும் காளைகளை அடக்குவது என்ற ஒரு விபரீத நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மனிதன் விலங்கோடு மோதும் இந்தச் சண்டையில் ஏராள மனித உயிர்கள் கோரமான முறையில் பலியாகின்றன. இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் மத்தியிலே காளை புகுந்து விரட்டுவதால் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் நடை பெற்ற இந்த ஜல்லிக்கட்டில், 120 பேர்கள் காயம் அடைந்ததாகவும், 13 பேர்கள் கவலைக்கிடமாக மதுரை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சேலம் அருகிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. தொடர்ந்து இது மாதிரியான கோரங்கள் நடந்துகொண்டும் இருக்கின்றன.

கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பேரில் மனிதப் படுகொலைகள் நடைபெற்று வருவதை அனுமதிக்கலாமா, அனுமதிக்க வேண்டுமா என்பது அறிவார்ந்த வினாவாகும். ``புலியிடம் சண்டை போட்டு, அதன் பல்லைப் பிடுங்கி வந்துதான் தாலி கட்டினான் தமிழன்’’ என்று சொல்லும் தமிழ்ப் புலவர்கள் நம் நாட்டில் உண்டு (தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? என்ற வினாவை எழுப்பி அதற்கு நல்ல பதிலைத் தந்துள்ளார் டாக்டர் இராச மாணிக்கனார் என்பது வேறு விடயம்!).

அந்த மரபைக் காக்கவேண்டும் என்பதற்காக இப்பொழுது மணமகனைக் காட்டுக்கு அனுப்பி புலியைக் கொன்று, அதன் பல்லைக் கொண்டு வா என்று கூற முடியுமா? இதனைச் சமூகம்தான் அனுமதிக்குமா? சட்டம்தான் ஏற்றுக்கொள்ளுமா? எந்த மணமகன்தான் ஏற்றுக் கொள்வான்!

கால ஓட்டத்தில் எத்தனையோ பழக்க வழக்கங்கள் குப்பைத் தொட்டிக்குள் போய் விட்டன. இந்த நிலையில் காளையை அடக்குவது என்பது வீரம் என்றும், அதனை மெய்ப்பித்துக் காட்டவே இந்த மஞ்சு விரட்டு விளையாட்டு என்றும் கதைப்பதெல்லாம் காலத்துக்குப் பொருந்தக் கூடியவையல்ல.

மதி பலமும், உடல் பலமும் நிறைந்ததுதான் வீரமாக இருக்க முடியும். முரட்டுத்தனமும், வெறும் சதைப் பலமும் தான் வீரம் என்று நினைப்பது விவேகமாக இருக்க முடியாது. வீரத்தை நிரூபிக்கப் போகிறோம் என்று கூறி, இளைஞர்கள் பலியாவதும், பொது மக்கள் படுகாயம் அடைவதும் சகிக்க முடி யாததாக, மனித நேயமற்றதாக இருக்கிறது. இதனை அரசு எப்படி அனுமதிக்கிறது என்பது (நியாயமான) கேள்வி.

பாரம்பரியப் பிரச்சினையில் எப்படி கை வைப்பது என்று அரசு நினைக்கலாம். பாரம்பரியம் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போது, அரசின் கடமை என்று ஒன்று இருக்கிறதே - அதனை நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இதுகுறித்து பல தரப்பிலும் சர்ச்சைகள், விவாதங்கள் கிளம்புவதுகூட அவசியமாகும். நமக்கு ஏன் வீண் வம்பு என்று பொறுப்புள்ளவர்கள் ஒதுங்கிக் கொள்ளக்கூடாது.

நன்றி: விடுதலை

1.14.2006

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

சித்திரை முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாக பெரும்பாலோர் கருதி கொண்டாடி வருகின்றனர். ஆண்டின் பெயர்கள்கூட தமிழில் இல்லை எனும்போது அது எவ்வாறு தமிழர்களின் ஆண்டாகக் கருதப்படும் என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?... தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்...‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.”

தையே முதற்றிங்கள்; தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஆண்டு குறித்து மேலும் அறிய....

http://www.tamilnation.org/forum/sabesan/050421sabesan.htm
http://semparuthi.com/x/modules/news/article.php?storyid=122