9.17.2005

பெரியார் 127

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஈரோட்டுக் கிழவனின் 127ஆம் பிறந்த நாள் இன்று. பெரியாரை தமிழர்களின் மனத்திலிருந்து தூக்கியெறிய பார்ப்பனர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இன்னும் மறக்கடிக்க முடியவில்லை. சமீபத்திய உதாரணம் விஜயகாந்தின் தே.மு.தி.க.

இந்த கட்சி துவங்கப்படுவதற்கு முன்பிருந்தே விஜயகாந்திற்கு ஆதரவாக பார்ப்பன பத்திரிக்கையான தினமலர் எழுதி வந்தது. அவரும் தன்னுடைய அறிவையெல்லாம் அடகு வைத்துவிட்டு, கட்சி தொடக்கவிழா அழைப்பிதழை திருப்பதி உண்டியலில் இட்டு வெங்டாசலபதிக்கு முதல் பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்திருந்தார். (வந்தரா என்பதை மாநாட்டிற்கு சென்றோர் கூறவும்.) மாநட்டு நிகழ்ச்சிக்கு கூடவே சோதிடரையும் அழைத்து அவருக்கு ராசமரியாதையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. (மாநாட்டு நிகழ்வுகளை எழுதிய தினமலர் தே.மு.தி.க.வினரை தடபுடலாக ஆதரித்து எழுதியிருந்தது. விஜயகாந்த் மாநாட்டு மேடையில் தினமலர் பத்திரிக்கையை படிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது.) ஆனாலும் விஜயகாந்த் தன்னுடைய கட்சியின் பெயருடன் 'திராவிட கழகம்' என்று இணைத்திருப்பதை அது விரும்பவில்லை. அதை ஒரு குறையாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பெரியாரின் செல்வாக்கை அறிந்துள்ள எவரும் தனக்குப் பிடிக்கவில்லையானாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாத சக்தி பெரியார் ஒருவரே. ஆனால் இன்றைய பத்திரிக்கைகள் அவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதைவிட அவருக்கு மரியாதை தரும் அரசியல்வாதிகளின் செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன.

பெரியாரின் வாழ்க்கையின் முக்கிய விதயங்கள் குறித்து அறிய இங்கே அழுத்தவும்.

மனுவை உயர்த்தும் மனுவாதி!

`துக்ளக்’ இதழில் கேள்வி பதில் பகுதியிலோ, அல்லது கார்ட்டூன் பகுதியிலோ, அநேகமாக தவறாது ஒரு இழையோட்டத்தைப் பார்க்கலாம். வீரமணி, வி.பி. சிங், லாலு, என்று ஒரு பட்டியலை வைத்துள்ளார். இவர்கள் மீது சேற்றை வாரி இறைக்காவிட்டால் அந்தவார `துக்ளக்’ இதழ் முழுமைப் பெற்ற மன நிறைவு அவர்களுக்கு இருக்காது.

ஒருக்கால் இவர்களை அர்ச்சிக்க மறந்தாலும்கூட இன்னொன்று நிச்சயமாக நிரந்தரமானது; அதுதான் பெண்கள்மீது சேற்றை மட்டுமல்ல - கல்லால் அடித்துக் `கொல்லுவது’ அந்த அளவுக்குப் பெண் என்று சொன்னாலே அவர்களின் பற்கள் நரநரக்கின்றன. எடுத்துக்காட்டுக்குச் சில வார கேள்வி - பதில் பகுதிகள் இதோ:

கேள்வி: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இந்த ஆட்சி யிலாவது நிறைவேறுமா?


பதில்: நடந்தாலும் நடக்கலாம். இப்போது நல்லது நடக்காது என்பதைத்தான் உறுதியாகச் சொல்ல முடியும். இம் மாதிரி விஷயங்கள் நடக்காது என்பதை அவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியாது.
(`துக்ளக்’ 25-5-2005)
கேள்வி: வழக்கம் போலவே இந்த வருடமும் +2 தேர்வில் பெண்களே அதிக சாதனை புரிந்திருக்கிறார்களே... என்ன சொல்கிறீர்கள்?

பதில்: என்ன மார்க் வாங்கி என்ன, என்ன சாதனை புரிந்து என்ன? ஆண்கள் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே! இதிலிருந்தே ஆண்களின் உயர்வு புரியவில்லையா? பிரம்ம ரிஷி ஆனது விசுவாமித்திரரின் சாதனைதான். ஆனால் அதை வசிஷ்டர் ஏற்றால்தான் திருப்தி என்று விசுவாமித்திரர் நினைத்த போதே, வசிஷ்டரின் உயர்வு புரியவில்லையா? ஆண்கள் வசிஷ்டர்கள்.
(`துக்ளக்’ 8-6-2005)


கேள்வி: முதல்வர் ஜெயலலிதா, பெண்களுக்கும் இலவச ஆட்டோக்கள் வழங்கியிருப்பது பற்றி?


பதில்: வீட்டில் சமையல் செய்து பழக்கம் உள்ளவர்கள் என்பதால், எந்தப் பொருளுக்கு, எந்த அளவிற்கு சூடேற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மீட்டரில் சூடேற்றுவது ஒரு பெரிய காரியமா? அதனால்,
பெண்களின் ஆட்டோக்கள் லாபகரமாக ஓடும்.
(`துக்ளக்’ 29-6-2005)

கேள்வி: கொலம்பியாவில் `வீட்டு வேலைகளை ஆண்கள் பகிந்து கொள்ளாவிடில், அதைக் காரணம் காட்டி விவாகரத்துக் கோரலாம்’ - என்று சட்டம் கொண்டு வரப் போகி றார்களாமே?

பதில்: வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்த பிறகுதான் பெண்களுக்குப் புத்தி வரும். `அய்யய்யோ! எல்லாம் இப்படி குளறுபடி ஆகிறதே!’ என்று அலறி, புதிய சட்டம் கோருவார்கள். ``வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்தால் - அதையே காரணம் காட்டி, பெண்கள் விவாகரத்து கோரலாம்’’ என்று புதிய சட்டம் வரும்.
(`துக்ளக்’ 10-8-2005)


கேள்வி: மகளிர் இடஒதுக் கீடு மசோதாவை இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறு எந்தக் கட்சியும் ஞாபகத்தில் வைத்திருப்பதாகத் தெரியவில்லையே! இப்போது உங்களுக்கு சந்தோஷம் தானே?

பதில்: இது டைம்பாம் மாதிரி. எப்போது வெடிக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் வெடிக்கும் என்பது தெரியும். அதனால் சந்தோஷத் திற்கு இடமில்லை. தாமதம் ஆவதில் கொஞ்சம் ஆறுதல் அவ்வளவு தான்.

இந்த வார துக்ளக்கிலும் (14-9-2005) இரண்டு கேள்வி பதில்கள்

கேள்வி: ஆனான பட்ட அரசியல்வாதிகளே பெண்களுக்காக மனம் இரங்கும் போது, உங்கள் மனம் மட்டும் அவர்கள்மீது இரக்கம் கொள்ள மறுப்பது - ஏன்?

பதில்: பெண்ணைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா?

கேள்வி: பெண்களுக்கும் மூதாதையர் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பற்றி?

பதில்: இது நல்லதே; நியாயமானதே. ஆனால் இது ரொம்பப் பழைய சிந்தனை. மனுஸ்ம்ருதியே `தன் மகன் தன்னிலிருந்து வேறுபட்டவன் அல்ல; மகளோ மகனுக்குச் சமமானவள். ஆகையால் ஒரு வனுடைய மகள் இருக்கும் போது வேறு யார் அவனுடைய சொத்தை கோர முடியும்?’ என்று கூறுகிறது. பின்னர் இந்த சிந்தனை யில் பல வக்ரங்கள் சேர்ந்ததால், சில மாறுதல்கள் தோன்றிவிட்டன. அந்த மாற்றங்கள் இன்று மாற்றப்படுகின்றன. அவ்வளவுதான்.

இந்தப் பதில்களில் இருந்து `சோ’வின் உள்ளத்தில் பெண்கள்பற்றிய மதிப்பீடு என்ன என்பது விளங்கும். பெண்களுக்கு ஆட் டோக்கள் வழங்கப்படுகின்றன என்கிறபோது, அதனை மனந்திறந்து பாராட்ட அகன்ற மனம் இல்லை. சமையல் செய்ய பெண்களுக்குத் தெரிந்ததால் எப்படி ஆட்டோ மீட்டரிலும் சூடு வைப்பது என்பதைப் பெண்கள் அறிவார்களாம். புத்தி எங்கோ மேயப் போகிறது? சமையல் தெரியாத ஆண்களுக்கு மீட்டரில் சூடு வைக்கத் தெரியாதா?

வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்தால் அதையே காரணம் காட்டி பெண்கள் விவாகரத்து கோரலாம் என்று புதிய சட்டம் வரும் என்கிறார். எத்தனையோ வீடுகளில் ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்யத்தான் செய்கிறார்கள் - அக்கிரகாரத்திலும் இது சர்வ சாதாரணம்தான்.

கணவனும், மனைவியும் வேலைக்குப் போவோராக இருந்தால் சமையலில் ஒரு வருக்கொருவர் ஒத்துழைப்புக் கொடுப்பதில்லையா? வெளிநாடுகளில் இது சர்வ சாதாரணம் தானே. அப்படி இருக்கும் போது `சோ’ கூறிய கற்பனைக்கு இடம் ஏது?
அவரின் உள்ளார்ந்த எண்ணம் என்பது பெண்கள் அடுப்பங்கரையில் `சமை’ந்து கிடக்க வேண்டும் என்பதே!

பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா என்பது `டைம்’ பாமாம்! எந்த நேரத்திலும் வெடிக்குமாம். எதற்கு எதை ஒப்பிடுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது சோவின் கண்ணோட்டத்தில் ஆபத்தான போக்கு. இப்போதைக்கு அந்த மசோதா நிறைவேறுவதில் தாமதம் ஆவதால் கொஞ்சம் ஆறுதல் அடையலாமாம் - என்னே அற்ப சந்தோஷம்!

தாயை வாடி என்றும் மகளைப் போடி என்றும் கூறும் கூட்டமாயிற்றே. அவர்களிடத்தில் பெண்ணுக்குரிய மதிப்பையும் உரிமையையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?
பரவாயில்லையே, `சோ’கூட திருந்திவிட்டாரே பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்ட மசோதாவை ஆதரித்து விட்டாரே என்று நினைக் கும்போது, அதில் கொண்டு வந்து மனுஸ்ம்ருதியைப் புகுத்தினாரே பார்க்கலாம். அதானே பார்த்தோம் - அவாளாவது திருந்துவதாவது!

பெண்ணுக்குச் சொத்துரிமை வழங்க மனுஸ்ம்ருதி சம்மதித்து இருக்கிறதாம்.
இவர்கள் ஒன்றை ஆதரிக்க வேண்டும் என்றால் அதற்கு மனு சம்மதித்து இருக்க வேண்டும் - ஒப்புதல் அந்த இடத்திலிருந்து கிடைக்க வேண்டும் - அப்பொழுதுதான் எந்த நல்ல காரியத்தையும்கூட இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். மனுஸ்ம்ருதியை எடுத்துக்காட்டும் திருவாளர் `சோ’ எந்த அத்தியாயத்தில் எத்தனையாவது சுலோகத்தில் இப்படி சொல்லப்பட்டு இருக்கிறது என்று கூற வேண்டாமா? அப்படிசொல்லுவது தானே ஆதாரப் பூர்வமானது - அறிவு நாணயமானது - எப்பொழுதுமே அவரிடம் அந்தப் பேச்சுக்கே இடம் கிடையாது.

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குமாறு மனுஸ்ம்ருதி சொல்லுகிறது - அப்படியென்றால் அந்த மனுதர்ம சாஸ்திரம் பெண்களில் உரிமைகளை அங்கீகரிக்கிறதா - என்ற கேள்வி எழலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்துச் சமூகப் பெண்கள் தங்கள் உரிமைக்காகவும் மரியாதைக்காகவும் எடுத்த எடுப்பிலேயே ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் அந்த முதல் காரியம் மனுதர்ம சாஸ்திரத்தைக் கொளுத்துவதாகத் தான் இருக்க முடியும். அந்த அளவுக்குப் பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது. இதோ மனுதர்மம் பேசுகிறது.

படுக்கை ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
(அத்.9. சு.17)

பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்போது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம்.
(அத்.9. சு.59)

கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க வேண்டியது.
(அத்.5. சு.154)

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது.
(அத்.5. சு.148)

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.
(அத்.11. சு.65)

இதற்கு மேல் பெண்களை இழிவுபடுத்த முடியாது - கேவலப்படுத்தவும் முடியாது. நசுக்கவும் முடியாது என்கிற அளவுக்கு அவர்கள் மீது கீழ்மைகளைச் சுமத்தும் மனுதர்மம் பெண்களுக்கு ஏதோ உயர்வு கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பதற்காக, அதனை இந்த இடத்தில் எடுத்துக் காட்டும் சோவின் நய வஞ்சகத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது.

பார்ப்பனர்களை வருணாசிரம அடிப்படையில் உயர்த்திப் பிடிப்பதாலும், பெண்களை புழுவினும் இழிவாக படம் பிடிப்பதாலும் இந்த மனுதர்மம் என்னும் குப்பை சோ கூட்டத்திற்குக் கரும்பாக இனிக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
அதனால்தான் மனோன்மணியம் ஆசிரியர் பேராசிரியர் சுந்தரனார் அழகாக படம் பிடித்தார்.

வள்ளுவர் செய் திருக்குறளை
மருவற நன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக்கொரு நீதி
என்றார்.

ஒரு குலத்துக்கொரு நீதியைத்தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்களை அடையாளம் காண வேண்டாமா?

பெண்ணுரிமை அமைப்புகள் பல போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றன! பேய்கள்தான் பெண்களுக்கு இரங்க வேண்டும் என்கிற அளவுக்கு இவ்வளவு பச்சையாகப் பெண்களைக் கேவலப்படுத்தும், இழிவுப்படுத்தும் இந்த ஆசாமியை நோக்கி ஏன் அவர்களின் கவனம் திரும்பவில்லை?

குறைந்தபட்சம் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வண்ணம் `துக்ளக்’கை வீதியில் போட்டு எரிக்க வேண்டாமா?

நன்றி: விடுதலை

நன்றி: இந்தப் பதிவை பதியத்தூண்டிய மற்றொரு பதிவு

9.13.2005

பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை” அழியவேண்டும்

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள்போலக் காட்டிக்கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண்களால் முயற்சிக்கப்படும் இயங்களுக்கும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதெல்லாமல், மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாட்டுகளைப் பலப்படுத்திக்கொண்டே போகும் என்பது நமது அபிப்பிராயம். எதுபோலென்றால், திராவிட மக்கள் விடுதலைக்குப் பார்ப்பனரும், பார்ப்பனர்தான் இந்நாட்டுக்குப் பிரதிநிதித்துவம் வாய்ந்தவர்கள் என்று கருதிக்கொண்டிருக்கும் அந்நிய நாட்டினர்களும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதன் பலனாக எப்படி நாளுக்கு நாள் திராவிட மக்களுக்கு அடிமைத்தனமும், என்றும் விடுதலை பெற முடியாதபடி கட்டுப்பாடுகளின் பலமும் ஏற்பட்டு வருகிறதோ அதுபோலவும், சமூக சீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் ஆரியப் புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படிச் சமூகக் கொடுமைகளும், உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும், மதத்தினாலும் நிலைபெற்றுப் பலப்பட்டு வருகின்றதோ அதுபோலவும் என்று சொல்லலாம்.

அன்றியும், ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில், ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது. அந்த ‘ஆண்மை’ உலகிலுள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உலகத்தில் “ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கப்படாவல்லது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. “ஆண்மை”யால்தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் “ஆண்மை” க்குத்தான் அவைகள் உண்டென்று, ஆண் மக்கள் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றியும், இந்துமதம் என்பதில் பெண்களுக்கு என்றென்றும் விடுதலையோ, சுதந்திரமோ எத்துறையிலும் அளிக்கப்படவே இல்லை என்பதைப் பெண் மக்கள் நன்றாய் உணரவேண்டும்.

பெண்கள் விஷயமாய் இந்து மதம் சொல்லுவ தென்னவென்றால், கடவுள் பெண்களைப் பிறவியிலேயே விபச்சாரிகளாய்ப் படைத்துவிட்டார் என்பது ஆகச் சொல்லுகிறதுடன், அதனாலேயே பெண்களை எந்தச் சமயத்திலும் சுதந்திரமாய் இருக்கவிடக்கூடாது என்றும், குழந்தை பருவத்தில் தகப்பனுக்குக் கீழும், வயோதிகப் பருவத்தில் (தாம் பெற்ற) பிள்ளைகளுக்குக் கீழும் பெண்கள் கட்டுப் படுத்தப்படவேண்டும் என்றும் சொல்லுகிறது. “பெண்கள், ஆண்களும்-மறைவான இடமும்-இருளும் இல்லாவிட்டால் தான் பதிவிரதைகளாக இருக்கமுடியும்” என்று அருந்ததியும் துரோபதையும் சொல்லி, தெய்வீகத்தன்மையில் மெய்ப்பித்துக் காட்டியதாகவும் இந்துமத சாஸ்திரங்களும், புராணங்களும் சொல்லுகின்றன.

இன்னும் பலவிதமாகவும், மத சாஸ்திர ஆதாரங்களில் இருக்கின்றன. இவற்றின் கருத்து ஆண்களுக்குப் பெண்ணை அடிமையாக்க வேண்டு மென்பதல்லாமல் வேறில்லை.
எனவே, பெண் மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் “ஆண்மை”யும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அதோடு பெண் மக்களும் இதை உண்மை என்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக் கிறதென்பதும் நடுநிலைமைப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமற் போகாது. பொதுமக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு அழியவேண்டுமானால், எப்படிக் கற்பிக்கப் பட்டிருக்கின்றது என்ற இந்து மதக் கொள்கையைச் சுட்டுப் பொசுக்கவேண்டியது அவசியமோ, அதுபோலவே, பெண் மக்கள் உண்மைச் சுதந்திரம் பெறவேண்டுமானால், ‘ஆண்மையும்’, ‘பெண்மையும்’ கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.

`பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலில் தந்தை பெரியார்

நன்றி: விடுதலை

9.11.2005

சீனாவும் அமெரிக்காவும்...

எல்லாரும் படம் காட்டிட்டாங்க. நம்ம பங்குக்கு ரெண்டு படம். 'சன்டேன்னா ரென்டு டைப்' இல்லீங்க..


சீன குடியரசுத் தலைவரின் அமெரிக்க பயணத்தின்போது...


அமெரிக்க அதிபரின் சீன பயணத்தின்போது...

படக்கதை சொல்லத்தான் வேண்டுமா?




9.07.2005

விநாயகர் சதுர்த்தி சிந்தனை

1. ஒருநாள் சிவனின் பெண்சாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து - “நான் குளித்துவிட்டு வெளியில் வரும் வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரம சிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்த பரம சிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக் கூடாது” என்று தடுத்ததாகவும், அதனால், பரம சிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்?” என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்?” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்கவேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியில் வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவ புராணத்திலும், கந்தபுராணத்திலும் ஆதாரங்களும் இருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் - பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4.தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்தததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்க யாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்!

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவை களிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட் டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் - தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளைப் பார்க்கும் போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டு பிடிக்க வேண்டியதாயிருக்கிறது).
கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் “கடவுள் ஒருவர் தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும், மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம் மாதிரி கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணரவேண்டும்.

உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம்; சிதம்பரக் கோயிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக் காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப்படி பூஜையும் நடந்து வருகிறது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.

சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக் கப்பட்டிருக்கின்றது.

இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களையெல்லாம் அந்தக் கடவுள் கொன்றுகொண்டே வந்ததும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியிலிருந்து, எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால், இவைகளுக்குத் தினமும் பெண் பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
`குடிஅரசு’ - 26-8-1928
நன்றி: விடுதலை

9.06.2005

சாமி விளையாட்டோ!

கடவுளுக்கு இலக்கணமாக மதத் தலைவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
பிறப்பு - இறப்பு அற்றவன் என்றுதானே சொல்லுகிறார்கள். அது உண்மையானால் சிவன் எங்கிருந்து வந்தான், பிரம்மா எங்கிருந்து வந்தான், விஷ்ணு எங்கிருந்து குதித்தான்?
விநாயகன் எப்படிப் பிறக்க முடியும். அவனுக்கு விநாயக சதுர்த்தி எப்படிச் கொண்டாட முடியும்? ராமநவமியும், கோகுலாஷ்டமியும் எங்கிருந்து வந்தன?

சரஸ்வதி எங்கிருந்து வந்தாள்? லட்சுமி உருவம் வந்தது எப்படி? கடவுள்களுக்குக் குடும்பங்களும், கூத்தியாள்களும், குழந்தைக் குட்டிகளும் எப்படி இருக்க முடியும்?
அறிவு நாணயத்தோடு சங்கராச்சாரியார்கள் சொல்லட்டும். கடவுளுக்கு வக்காலத்து வாங்கும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., தலைவர்களும்தான் சொல்ல முன்வரட்டுமே!

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் கடவுள், மதத்தின் பெயரால் எதை நடத்தி னாலும் அது கடைந்தெடுத்த பித்தலாட்டத்திற்குப் பிறந்த பித்தலாட்டமாகத்தானிருக்க முடியும்.

இந்த அடிப்படைக்கு அர்த்தம் காணாமல், கோயில், குளம், திருவிழாக்கள், பண்டிகைகளில் ஈடுபடும் எந்தப் பெரிய மனிதனும், மேதாவியும் பெரும் பதவிக்காரர்களும், பெருந்தனக்காரர்களும் யோக்கியமானவர்களாக, அறிவு நாணயம் உள்ளவர்களாக, பொது நிலையிலும், நடு நிலையிலும் சிந்தனை உள்ளவர்களாக இருக்க முடியுமா என்று கேட்க விரும்புகிறோம்.

மக்களின் அச்சத்தையும், ஆசைகளையும் பயன்படுத்தி, அவர்களைச் சுரண்டுவதற்குக் கற்பிக்கப்பட்ட கடவுளுக்காக, மதத்துக்காக வக்காலத்து வாங்குவதைவிட மோசடி ஒன்று இருக்க முடியுமா?

இந்த மோசடிக்கு ஏடுகளும், இதழ்களும், தொலைக்காட்சிகளும் துணைபோகின்றன என்றால், இது கொலைக் குற்றத்தைவிட மோசமானது அல்லவா?

அதுவும் விநாயக சதுர்த்தி என்கிற பெயரால் விழாக் கொண்டாடி நாட்டையே கலவரப்படுத்துகிறார்கள். பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து அவன் பிறந்தான் என்று சொல்லுவதற்கு இந்த நாட்டு அறிஞர்கள், படித்தவர்கள் அசூயைப் படுவதில்லையே - அவமானம்! அவமானம்!! வெட்கக்கேடு! படுவெட்கக்கேடு!!

இந்த அழுக்குருண்டைப் பிள்ளையாரு வீதிக்கு வீதி தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகத் தொண்டர்கள் உடைத்துக் காட்டியும் கூட புத்தி வரவில்லையே!
கற்பித்தது தான் கற்பித்தார்கள், யோக்கியமான, ஒழுக்கமான, ஆபாசமற்ற, அருவருப் பில்லாத ஒன்றைக் கற்பிக்கக் கூடாதா? அந்தக்கால மனிதனுக்கு அவ்வளவுதான் அறிவு இருந்தது என்பதை விவாதத்துக்காக ஒப்புக்கொண்டாலும் இந்தக் காலத்திலும் அதனைக் கொண்டாட, நம்பிக் கூத்தாட புத்தி எங்கே போயிற்று என்றுதானே கேட்க வேண்டும்.
நடை, உடை, பாவனைகளில் மாற்றம் காணும் மனிதன், பிள்ளையார் பார்வதியின் அழுக் குருண்டையில் பிறந்தான் என்பதை நம்புவதில் மாத்திரம் பழங்காலத்துக் காட்டுமிராண்டியாய் இருக்கிறானே! இவனைக் காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னால் குற்றமாகுமா? இதைவிட வேறு வார்த்தை கிடைக்கவில்லையே, என்ன செய்ய என்று தந்தை பெரியார் வருத்தப்பட்டதைத் தவறு என்று கூறிட எந்த அறிவாளிகள் இருக்கிறார்கள்?

கடவுளுக்குப் படையல் போடுகிறான். எந்தக் கடவுள் தின்றது? சொல்லுங்கள் பார்க்கலாம். ஆண் கடவுளையும், பெண் கடவுளையும் இரவில் ஓர் அறையில் கொண்டு போய் விடுகிறான்? அந்தப் பெண் கடவுள் கருவுற்று பிரசவம் பார்த்தவன் எவன்? விரலை மடக்க முடியுமா? இந்தச் சிறு பிள்ளை விளையாட்டு இந்தக் காலத்திலுமா?

சின்ன வயது விளையாட்டு பெரியவர்கள் ஆகியும் போகவில்லை என்பதால்தான் இந்தச் சாமி விளையாட்டோ!

நன்றி: விடுதலை

9.05.2005

விநாயக லீலை: புராணகதை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் - மேனிநுடங்காது
பூக்கொண்டு துப்பார்த்துறைமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

- விநாயகர் ஸ்லோகம்

தேவர்கள் துயர் துடைக்க விநாயகர் கஜமுகன் என்ற அரக்கனை அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார். இது குறித்த புராணக்கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.

யானைத்தலையை கொண்ட கஜமுகன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமான் விநாயகரை அழைத்து கஜமுகனை அழிக்குமாறு பணித்தார். சிவபெருமான் அளித்த பூதகணங்களுடன் சென்று கஜமுகனுடன் கடும் போரிட்டு அவனை அழித்தார் விநாயகர்.

விநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர்.

நினைத்த காரியம் நிறைவேறுவதுதான் சித்தி . புத்தி என்றால் அறிவு. விநாயகரை வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடும். அறிவும், ஞானமும் பெருகும். இதனால் விநாயகருக்கு பாலச்சந்திரன் என்ற பெயரும் உண்டு.

புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.

நன்றி: தட்ஸ் தமிழ்

9.01.2005

இந்து மதத்தில் பெண்ணின் திருமண வயது 7 - சங்கராச்சாரியார்

விவாஹ வயதும் சட்டமும்

உபநயனம் மாதிரிப் பெண்ணின் ஏழாவது வயசில் கல்யாணம் பண்ண வேண்டும்;அப்போதுதான் சரணாகதி புத்தி வரும் - என்று சொன்னால், 'இது இந்த காலத்தில் ஸாத்தியமா?சட்ட விரோதமல்லவா?என்று கேட்பீர்கள்.

'ராஜாங்கத்தின் சட்டத்தை மீறு'என்று சொல்லக் கூடாதுதான். அப்படிச் சொல்லவில்லை. சட்ட மறுப்பு (civil disobedience) என்று இப்போது ஆட்சி நடத்துகிறவர்களே ஒரு காலத்தில் பண்ணிக் காட்டித்தான் இருக்கிறார்கள். 'சட்டம் என்று யாரோ எழுதினதற்காக எங்கள் ஸ்வாதந்தரியத்தை விட மாட்டோம்'என்று அப்போது சொன்னார்கள். அதே மாதிரி, "ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லை;பிராணன் போனாலும் பரவாயில்லை;ஆத்ம «க்ஷமத்துக்காக ஏற்பட்ட விவாஹ ஸம்ஸ்காரத்தை வெறும் லௌகிக விஷயமாக்கிச் சட்டம் பண்ணினால் ஏற்கமுடியாது"என்று கிளம்புகிற வேகம் நம் ஜனங்களுக்கு இல்லை. அப்படி இல்லையே என்பது மட்டும் நான் 'சட்டத்தை மீற வேண்டாம்'என்று சொல்வதற்குக் காரணமில்லை. ஒரு விஷயத்தில் மீறினால், மற்றவற்றிலும் மீறுகிற எண்ணம் உண்டாகி, கட்டுப்பாடே போய்விடும். அதனால்தான் (சட்டத்தை மீறும்படிச்) சொல்லவில்லை. ஆனாலும் சட்டத்தை மீறாமலே ராஜாங்கத்துக்கு சாஸ்திரஅபிப்ராயத்தை விடாமல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ராஜாங்கத்துக்கு மட்டுமில்லை;ஜனங்களிலும் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு மேல் சாஸ்திர அபிப்ராயத்தை விட்டு விட்டார்களே!அவர்களுக்கும் பாக்கியிருக்கிற ஸ்வல்ப சாஸ்திரக்ஞர்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சட்டத்தை மீறாமலே, முன்னேற்றம் எத்தனை நிதானமாக ஏற்பட்டாலும் அதனால் மனம் தளராமல் நூறு வருஷம் ஆனாலும் ஆகட்டும்!இன்னம் அதிகமானாலும் ஆகட்டும்! உன்னதமான இந்த தேசாதாரம் மறுபடி பழக்கத்தில் வரப் பண்ணுவதற்கு நம்மாலானதை சாந்தமான வழியிலேயே செய்வோம் என்று செய்ய வேண்டும். பலனை பார்க்க நாம் (உயிரோடு) இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம்தான் பலன் உண்டாகும் என்றாலும், அதற்கு இப்போதே நம்மாலான விதையைப் போட்டுவிட வேண்டும். யத்தனத்தை இப்போது ஆரம்பித்தால்தான், என்றைக்கோ ஒரு நாளாவது பலன் கிடைக்கும். பிரயத்தனமே இல்லாவிட்டால் என்றைக்கும் பலன் ஏற்பட முடியாதல்லவா? விதையே போடாவிட்டால் எப்படி மரம் உண்டாகும்?

தர்மசாஸ்திரமே பெரிய சட்டம் என்று ராஜாங்கத்தாருக்கும், பொதுஜனங்களுக்கும் புரியும்படியாக, ஹிதமான முறையில் (by persuasion) வற்புறுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

நன்றி: காமகோடி