வீரம் என்பதற்கான விளக்கமே கூட மாறுபடக் கூடிய காலம் இது. இந்தக் கால கட்டத்தில் மனிதன் விலங்குடன் சண்டை போட்டு வெற்றி பெறுவது வீரம் என்று நினைக்க முடியாது. ஜல்லிக்கட்டு என்று சொல்லி, மதுரை, சேலம் போன்ற மாவட்டப் பகுதிகளில் சீறிப் பாயும் காளைகளை அடக்குவது என்ற ஒரு விபரீத நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மனிதன் விலங்கோடு மோதும் இந்தச் சண்டையில் ஏராள மனித உயிர்கள் கோரமான முறையில் பலியாகின்றன. இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் மத்தியிலே காளை புகுந்து விரட்டுவதால் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் நடை பெற்ற இந்த ஜல்லிக்கட்டில், 120 பேர்கள் காயம் அடைந்ததாகவும், 13 பேர்கள் கவலைக்கிடமாக மதுரை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சேலம் அருகிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. தொடர்ந்து இது மாதிரியான கோரங்கள் நடந்துகொண்டும் இருக்கின்றன.
கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பேரில் மனிதப் படுகொலைகள் நடைபெற்று வருவதை அனுமதிக்கலாமா, அனுமதிக்க வேண்டுமா என்பது அறிவார்ந்த வினாவாகும். ``புலியிடம் சண்டை போட்டு, அதன் பல்லைப் பிடுங்கி வந்துதான் தாலி கட்டினான் தமிழன்’’ என்று சொல்லும் தமிழ்ப் புலவர்கள் நம் நாட்டில் உண்டு (தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? என்ற வினாவை எழுப்பி அதற்கு நல்ல பதிலைத் தந்துள்ளார் டாக்டர் இராச மாணிக்கனார் என்பது வேறு விடயம்!).
அந்த மரபைக் காக்கவேண்டும் என்பதற்காக இப்பொழுது மணமகனைக் காட்டுக்கு அனுப்பி புலியைக் கொன்று, அதன் பல்லைக் கொண்டு வா என்று கூற முடியுமா? இதனைச் சமூகம்தான் அனுமதிக்குமா? சட்டம்தான் ஏற்றுக்கொள்ளுமா? எந்த மணமகன்தான் ஏற்றுக் கொள்வான்!
கால ஓட்டத்தில் எத்தனையோ பழக்க வழக்கங்கள் குப்பைத் தொட்டிக்குள் போய் விட்டன. இந்த நிலையில் காளையை அடக்குவது என்பது வீரம் என்றும், அதனை மெய்ப்பித்துக் காட்டவே இந்த மஞ்சு விரட்டு விளையாட்டு என்றும் கதைப்பதெல்லாம் காலத்துக்குப் பொருந்தக் கூடியவையல்ல.
மதி பலமும், உடல் பலமும் நிறைந்ததுதான் வீரமாக இருக்க முடியும். முரட்டுத்தனமும், வெறும் சதைப் பலமும் தான் வீரம் என்று நினைப்பது விவேகமாக இருக்க முடியாது. வீரத்தை நிரூபிக்கப் போகிறோம் என்று கூறி, இளைஞர்கள் பலியாவதும், பொது மக்கள் படுகாயம் அடைவதும் சகிக்க முடி யாததாக, மனித நேயமற்றதாக இருக்கிறது. இதனை அரசு எப்படி அனுமதிக்கிறது என்பது (நியாயமான) கேள்வி.
பாரம்பரியப் பிரச்சினையில் எப்படி கை வைப்பது என்று அரசு நினைக்கலாம். பாரம்பரியம் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போது, அரசின் கடமை என்று ஒன்று இருக்கிறதே - அதனை நினைத்துப் பார்க்க வேண்டாமா?
இதுகுறித்து பல தரப்பிலும் சர்ச்சைகள், விவாதங்கள் கிளம்புவதுகூட அவசியமாகும். நமக்கு ஏன் வீண் வம்பு என்று பொறுப்புள்ளவர்கள் ஒதுங்கிக் கொள்ளக்கூடாது.
நன்றி: விடுதலை
1.27.2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
idhai patri nan ezudha ninaithirundhen. padhithadharku nandri.
விலங்குகள் பலி கொடுக்கப்படுவதை தடை செய்திருந்தார்களே? பாரம்பரியம் என்பதுபற்றி அரசுக்கு கவலையிருப்பதாகத் தெரியவில்லை.
Post a Comment