8.30.2005

ஸ்ரீத்ரிபுரஸுந்தரி - அஷ்டகம்

1.கதம்ப வந சாரிணீம் முனிகதம்பகாதம்பிநீம்
நிதம்பஜிதபூதராம் ஸ§ரநிதம்பிநீபூஜிதாம் I
நவாம்புருஹலோசநாம் அபிநவாம்புத ச்யாமலாம்
த்ரிலோசன குடும்பிநீம் த்ரிபுரஸ§ந்தரீமாச்ரயே II

கதம்பவனத்தில் வசிப்பவளும், முனிவர்களாகிய தம்ப வனத்திற்கு மலர்ச்சியை அளிக்கும் முகில் கூட்டமெனத்திகழ்பவளும், மலைபோல் திகழும் கடிபாகத்தையுடையவளும், தேவ மங்கையர் வழிபட நிற்பவளும், புதுத்தாமரை யத்த கண்களையுடையவளும், புதிய நீருண்ட மேகம் போன்று கருமேனியுடையவளும், முக்கண்ணர் மனையாளுமான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.

2.கதம்பவந வாஸினீம் கனகவல்லகீ தாரிணீம்
மஹார்ஹமணிஹாரிணீம் முகஸமுல்லஸத்வாருணீம்
தயாவிபவ காரிணீம் விசதரோசனாசாரிணீம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுரஸ§ந்தராமாச்ரயே II

கதம்ப வனத்தில் வசிப்பவளும், தங்க வீணை தாங்கியவளும், மதிப்பு மிக்க மாணிக்க ஹாரம் பூண்டவளும், வாயில் கமழும் வாருணி கொண்டவளும், பக்தர்களுக்கு கருணை பாலிப்பவளும், தெளிவான கோரோசனை திலகம் கொண்டவளும், முக்கணர்மனையாளுமாகிய த்ரிபுர சுந்தரியை சரண்புகுகிறேன்.

3.கதாம்பவனசாலயா குசபரோல்லன்மாலயா
குசேபமிதசைலயா குருக்ருபாலஸத்வேலயா I
மதாருணகபோலயா மதுரகீத வாசாலயா
கயாபி கனலீலயா கவசிதா வயம் லீலயா II

கதம்ப வனத்தில் குடிகொண்டதும், மலையையத்த மார்பகங்களையுடையதும், அம்மார்பகங்களில் துவளும் மாலைகளுடன் அளவில்லாத கருணையின் எல்லையோ எனத்திகழ்வதும், வாருணீ மதத்தால் செவ்வேறிய கன்னங்களையுடையதும், இனிய கீதம் முழுங்குவதும், நீருண்ட மேகமென விளங்குவதுமான ஆச்சார்யமான பேரருளால் நாங்கள் பாதுகாப்பு உடையவர்களானோம்.

4.கதம்பவனமத்யகாம் கனகமண்டலோபஸ்திதாம்
ஷடம்புருஹ வாஸினீம் ஸததஸித்த ஸெளதாமினீம்
விடம்பிதஜபாருசிம் விகர சந்த்ர சூடாமணிம்
த்ரிலோசன குடும்பினீம், த்ரிபுரஸ§ந்தரீமாச்ரயே II

கதம்பவனத்திற்குள் வசிப்பவளும், தங்கமயமன மண்டலத்தினுள் ஆறு தாமரை மலர்களில் வசிப்பவளாய் எப்போதும் ஒளிரும் மின்னலாய் இருப்பவளும், ஜபா புஷ்பம்போல் செந்நிரமானவளும், ஒளிரும் சந்திரக்கலை அணிந்தவளும் ஆன முக்கண்ணரான பரமேச்வரன் மனையாளான த்ரிபுரசுந்தரியை சரணடைகிறேன்.

5.குசாஞ்சித விபஞ்சிகாம் குடிலகுந்தலாலங்க்ருதாம்
குசேசய நிவாஸினீம் குடிலசித்தவித்வேஷிணீம் !
மதாருண விலோசனாம் மனஸிஜாரிஸம்மோஹினீம்
மதங்கமுனிகன்யகாம் மதுரபாஷிணீமாச்ரயே II

மார்பகங்களோடு ஒட்டிய வீணையும், மேடு பள்ளமான குந்தலங்களும் விளங்க, தாமரையில் வீற்றிருந்து, கெட்ட மனதுடையோரை வெறுத்து ஒதுக்கி, மதமேறிய கண்களோடு மன்மதனையடக்கிய பரமனை மயக்குகிற, மதங்கமுனிவர் மகளான, இனிய பேச்சுடைய மகேச்வரியை சரண் அடைகிறேன்.

6.ஸ்மரேத் ப்ரதமபுஷ்பிணீம் ருதிரபிந்து நீலாம்பராம்
க்ருஹீதமது பாத்ரிகாம் மதவிகூர்ணநேத்ராஞ்சலாம் I
கனஸ்தனபரோந்நதாம் கலித சூலிகாம் ச்யாமலாம்
த்ரிலோசன குடும்பினீம் த்ரிபுர ஸ§ந்தரீ மாச்ரயே II

மன்மதனின் முதல் பாணமான தாமரை மலர் கொண்டவளும், ரத்தப்பொட்டுகளடங்கிய நீல வஸ்திரம் தரித்தவளும், கையில் மது பாத்திரமேந்தியவளும், மதமேறிய கண்களும், பருத்த ஸ்தனங்களும், அவிழ்ந்த முடியும் கொண்டு கருத்த மேனியளான முக்கண்ணரின் மனவியை த்ரிபுர சுந்தரியை சரண் அடைகிறேன்.

7.ஸகுங்கும் விலேபனாம் அலகசும்பி கஸ்தூரிகாம்
ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸதரசாப பாசாங்குசாம் I
அசேஷஜன மோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸ§ப பாஸ§ராம் ஜபவிதௌ ஸ்மராம்யம்பிகாம் II

ஜபம் செய்யும்போது ஜபாம்புஷ்பம் போல் விளங்கும் அம்பிகையை நான் ஸ்மரிக்கிறேன். அந்த அம்பிகையானவள் குங்குமப் பூச்சுடனும், அலகங்களைத் தொடும் கஸ்தூரி திலகத்தோடும் விளங்குகிறாள். புன்முருவல் பூத்த கண்களுடனும், வில், பானம், பாசம், அங்குசம் ஏந்திய கைகளுடனும் அகில ஜனங்களையும் கவர்ந்து மோஹிக்கச் செய்கிறாள் அம்பிகை. சிவந்த மாலைகளும், ஆபரணங்களும், ஸ்திரமும் தரித்தவள் அவள்.

8.புரந்தர புரந்த்ரகா சிகுரபந்த ஸைரந்த்ரிகாம்
பிதாமஹபதிவ்ரதா படுபாடீரசர்சாரதாம் I
முகுந்த ரமணீமணீ லஸதலங்க்ரியா காரிணீம்
பஜாமி புவம்பிகாம் ஸ§ரவதூடிகா சேடிகாம் II

தேவமங்கயரை வேலைக்காரிகளாகக் கொண்டுள்ள புவன மாதாவான அம்பிகையை ஸேவிக்கிறேன். இந்த்ரன் மனைவி, அம்பிகையின் தலையை வாரிப்பின்னும் ஒப்பனைக்காரியாகவும், ஸரஸ்வதிதேவி, அம்பிகையின் உடலை சந்தனக்குழம்பால் பூசும் தங்கையாகவும், லக்ஷ்மீ தேவி, பல ஆபரணங்களால் அம்பிகையை அழகுபடுத்தும் மாதுவாகவும் பணிபுரிகிறார்கள்.

நன்றி: காமகோடி

8.28.2005

திருவாசகம் - இளையராஜா - சோ

கேள்வி: இளையராஜாவின் `திருவாசகம்’ சிம்ஃபொனி கேட்டீர்களா? (கேட்டவர்கள் எல்லோரும் `ஆஹா’ என்று பாராட்டுகிறார்களே)

பதில்: இந்த மாதிரி விஷயங்களில் (குறிப்பாக), நான் பழைமைவாதி, விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும், ஸ்ரீ ருத்ரத்தையும்கூட, மேலை நாட்டு சங்கீத பாஷையில் கொண்டு வரலாம்; அது அந்த சங்கீதத்தின் மேன்மையை உணர்ந்த வர்களுக்கு, ரசிக்கக் கூடியதாக இருக்கலாம். இந்த திருவாசக ஸிம்ஃபொனியும் அப்படித்தான். கோவிலில் கேட்கக் கூடியதாக இல்லை; சர்ச்சிற்கு உகந்ததாக இருக்கலாம். துதி, தமாஷாகி விடுவது ஏற்கக் கூடியது அல்ல என்பது என் கருத்து.
(`துக்ளக்’ 24-8-2005 பக்கம் 24-25)

துக்ளக் `சோ’ ராமசாமி தான் ஒரு பழமைவாதி என்பதைப் பட்டாங்கமாக ஒப்புக் கொண் டுள்ளார். இதன் மூலம்தான் ஒரு நியாயவாதி என்றோ நடுநிலைவாதி என்றோ என்றைக்கும் சொல்ல முடியாத நிலைக்குத் தன்னைத் தள்ளிக் கொண்டு விட்டார்; ஒரு வகையில் இது நல்லதுதான். வீராதி வீரராக அரசியலிலும், மற்றவற்றிலும் வாலை முறுக்கிக் கொண்டு பேனா வைத் தூக்கிக் கொண்டு கிளம்பும் போதெல்லாம் நறுக்கென்று மண்டையில் குட்ட இது பயன்படக் கூடும்.

பழைமை மீதில் நாட்டம் கொள்வதற்குக் காரணமும்கூட, பார்ப்பனப் பற்றும், வெறியும் தான் பழைமையான வருணாசிரமம்தானே அவர்களைத் தூக்கி உயர் ஜாதி என்கிற யானைமீது உட்கார வைக்கிறது.

புதுமை என்றால் பழைமையான இராமாயணத்தையும், பாரத்தையும், சாஸ்திர இதிகாச வேதங்களை எல்லாம் குப்பைக் குழியில்தானே கூட்டித் தள்ள வேண்டியிருக்கும். அதனால்தான் மிகவும் விழிப்பாகவும், வினயமாகவும் பழைமைவாதி என்று தனக்குத் தானே முத்திரை குத்திக் கொள்கிறார்.

இளையராஜா போன்றவர்கள் என்னதான் பக்தியில் உருகி, சிம்பொனி இசைத் தேனில் திருவாசகத்தைக் குழைத்துக் கொடுத்தாலும், பார்ப்பனர்களின் பார்வையில் பத்துக்கு ஒன்று என்கிற மதிப்பெண்ணைக் கூடப் பெறப் போவதில்லை.

இன்னொன்றையும் இதில் கவனிக்கத் தவறி விடக் கூடாது. திருவாசகத்துக்கு இளையராஜா அமைத்திருக்கும் இசை சர்ச்சுக்குத்தான் உகந்ததாம்.
இன்னும் புரியவில்லையா? இளையராஜா இந்த திருவாசக சிம்பொனியை உருவாக்கிட நிதி உதவி செய்தது கிருத்தவ அமைப்பு; அதற்குத்தான் இந்த இந்து முன்னணி - ஆர்.எஸ்.எஸ். மொத்து.

இனிமேலாவது இளையராஜாக்களின் கண்கள் திறக்குமா? சர்ச்சுகளின் மண்டையில் தான் உறைக்குமா?

நன்றி: விடுதலை

8.26.2005

கிருஷ்ண ஜெயந்தியும் இயக்குநர் சூர்யாவும்!

`நியூ’ என்ற திரைப்படம் சூர்யா என்பவரின் இயக்ககத்தில் வெளிவந்தது. அப்பட்டமான ஆபாசக் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி இந்தத் திரைப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார். தீர்ப்பு வருவதற்குள் திரைப்படம் ஓடி மறைந்து விட்டது என்றாலும் தணிக்கைக் குழுமம் அளித்த சான்றிதழை உயர்நீதிமன்றம், ரத்து செய்ததன் மூலம் ஓர் அதிர்ச்சி வைத்தியத்தைத் தந்துள்ளது.

சினிமாவை ஒரு கலை என்று ஒப்புக் கொள் வதற்கே தயங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவும், இதழ்களும் பச்சையாக சமூகச் சீரழிவை வியாபாரமாக செய்து கொண்டு இருக்கின்றனவோ என்று கருதும் அளவுக்குப் புரையோடி, சமுதாயத்தின் மனப்பான்மையையே முற்றிலும் மாசுபடுத்தும் எல்லையைத் தொட்டு விட்டது.

``சுற்றுச்சூழல் மாசு’’ என்பதில் முதலிடம் வகிப்பது இந்த சினிமாக்களே!
யதார்த்தத்தைத்தானே படம் பிடிக்கிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டும் சில `மேதா விலாசங்கள்’ நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குளியலறையில் மனிதனுக்கு இருக்கும் யதார்த்த உரிமையைப் படம் பிடிப்பார்களா? அதற்கு எது தடையாக இருக்கிறதோ, அதனை நாகரிகம் கருதி மற்றவற்றிலும் கடைபிடிப்பதுதான் மனிதன் நாகரிகக் கட்டுக்குள் இருக்கிறான் என்பதற்கு இலக்கணமாகும்.

இந்த ஆபாசம் ஒருபுறம்; மக்களை மடமைச் சாக்கடையில் தள்ளும் வகையில் விஞ்ஞானக் கருவியான சினிமா மூலம் மூட நம்பிக்கை நச்சுக் கிருமிகளைப் பரப்புவது எந்த வகையில் சரியானது?

தணிக்கைக் குழுவில் விஞ்ஞான மனப்பான்மை உள்ள பகுத்தறிவுச் சிந்தனையாளர்களை நியமிக்கவேண்டாமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளுள் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று கூறப்படவில்லையா?

`பாபா’க்களும், `அண்ணாமலை’களும், `சந்திரமுகி’களும் அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்கத் தக்கதுதானா? இந்தக் காலகட்டத்திலும் ஆவி, பேய் என்பதெல்லாம் - நாட்டைக் காட்டு விலங் காண்டித்தனத்துக்கு இழுத்துச் செல்லுவதல்லவா?

மனிதனின் மகத்தான அறிவை நாசப்படுத்துபவர்களைவிட மூட நம்பிக்கை நோய்க்கு ஆட்படுத்துபவர்களைவிட கொலையாளிகள், சமூக விரோதிகள் வேறு யாராக இருக்க முடியும்?

இந்து மனப்பான்மை என்பதே ஒரு வகையான கொடூர - மனிதத் தன்மைக்கு விரோதமான நோய்களைப் பரப்பும் சாக்கடையாகும். அதில் தொட்ட இடமெல்லாம் அசிங்கம்தான், ஆபாசம் தான் - அறிவுக் கண்களைக் குருடாக்கும் மூடத்தனம்தான்.

எடுத்துக்காட்டாக இன்றைக்கு `கிருஷ்ண ஜெயந்தி’ கொண்டாடுகிறார்கள். அந்தக் கிருஷ்ணன் எப்படி பிறந்தான் என்றால், மகாவிஷ்ணுவின் மார்பு மயிரிலிருந்து பிறந்தான் என்கிறார்கள். கேட்பதற்கு எவ்வளவுக் கேவலமாக அறிவுக்கும் பொருத்தமற்றதாக இருக்கிறது.

பெண்களோடு கூடிக் குலவுவது; முத்தமிடுவது, புணர்வது என்பதுதான் இந்தக் கிருஷ்ணக் கடவுளின் வேலை. கிருஷ்ணன் என்கிற இந்த ஆண் கடவுள் நாரதன் என்கிற ஆண் கடவுளோடு புணர்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றான். அவைதான் பிரபவ, விபவ என்று தொடங்கும் தமிழ் வருடங்களாகும்.

இதையெல்லாம் சொல்லுவதற்கோ, நம்புவதற்கோ கூச்சப்படாதவர்கள் இந்துத்துவாவாதிகள். இந்து மதச் சிந்தனை என்பதே ஆபாசக் குட்டைதான்!

இன்றைய தினம் பெண் கேலிபற்றிக் கவலைப்படுகிறோம். இதில் ஈடுபடும் ஆண்களைத் தண்டிக்கச் சட்டம் கூட வந்துள்ளது.
இதற்கெல்லாம் வழிகாட்டி இந்து மதத்தின் கிருஷ்ணன் என்கிற கடவுள்தானே. இல்லை என்று மறுக்க முடியுமா? பக்தியின் பெயரால் நடந்தாலும், கலையின் பெயரால் நடந்தாலும் ஆபாசம் ஆபாசம்தானே?

கிருஷ்ணனாகிய இந்த ஆண் கேடி - காலி பிறந்த நாள் என்று கூறி மத்திய - மாநில அரசுகள் விடுமுறையும் விடுகின்றனவே - அரசு சார்பில் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறார்கள். இந்த நாட்டில் பெண் கேலி எப்படி ஒழியும்?

அறிவார்ந்த சிந்தனைகள் எல்லா இடங்களிலும் இடம் பெற்றால்தான் நாடு காடாக மாறாமல் தப்பிக்கும் - எச்சரிக்கை!

நன்றி: விடுதலை

கண்ணன் சொன்னான் கம்பனும் சொன்னான்

ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அவற்றைக் கடந்திருந்திருக்கிறது என்றால், அதெப்படி என்று தோன்றுகிறது. குழப்பமாயிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரி பல தினுசாகக் குழப்பிக் குழப்பி, பிறகு ஒரேடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.

நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன என்று கீதையில் ஒரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே. இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.

ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமில்லை. இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர், இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

பொம்மலாட்டப் பொம்மை மாதிரித்தான் சகல பிராணிகளும். உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான். (ஈச்வர, ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா) என்கிறார்.

இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார். எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன என்று கூறுவபரே, என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை. நானும் ஒரு பொருளும் இல்லை என்று கூறுகிறார். ( ந ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷி அவஸ்தித) இங்கே ஆத்மா எல்லாலற்றையும் கடந்தது என்று தத்துவம் பேசப்படுகிறது.
இது என்ன குழப்புகிறாயே என்றால், நான் எல்லாருக்கும் விளக்குவதில்லை ( ந அஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய:) அதுதான் என் யோகமாயை (யோக மாயா ஸமாவ்ருத:) என்று ஒரு போடு போடுகிறார்.


இது என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது. ஒன்றும் புரியவில்லையே என்று தோன்றுகிறதா.

நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம். நான் ஒருவனுக்கும் விளக்க மாட்டேன் என்று பகவான் சொல்லியிருந்தால், ஆயிரம்பேர் இருந்தால் ஆயிரம்பேருக்கும் விளக்க மாட்டேன் என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, நான் எல்லோருக்கும் விளக்க மாட்டேன் என்றால், ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம் ஒருவனுக்காவது விளக்குவேன் என்றுதான் பொருள். பகவான் எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன் என்றாரேயன்றி ஒருவனுக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன் என்று சொல்லவில்லை. அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.

அந்தச் சிலர் யார். இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன். ஒரு பொருளும் என்னிடம்
இல்லை என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு ஐயோ, பாம்பு பாம்பு என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன. மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.

இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம். மாலைக்குள் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது எப்படியோ அப்படிதான். இரண்டும் இண்மைதானே.
பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள் விழுங்கி விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி இது மாலைதான் என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது. மாயையினால் முடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன்தான்.

பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விளக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. ப்ரபஞ்சம் என்றே ஒன்று இல்லாதபோது அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே. அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கின்றபோது இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, என்னிடத்திலும் பொருட்கள் இல்லை என்று கூரிவிட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் எனபதால், உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமா.
கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்.

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேத்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.

அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. அலங்கலில் தோன்றும் பெய்ம்மை அரவு - மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.
நம்மாழ்வாரைப் பற்றி சடகோபரந்தாதி பாடின பரம வைஷ்ணவரான கம்பர், பரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்.

நன்றி: காமகோடி

8.24.2005

சவுந்தர்ய லஹரி ( 98 ) - கல்வியறிவு பெருக

கதா காலே மாத: கதய
கலிதாலக் தகரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ
சரண நிர்ணேஜன ஜலம்!
ப்ரக்ருத்யா மூகானாம்பி
சகவிதா காரணதயா
கதா தத்தே வாணீ முககமல
தாம்பூல ரஸதாம்!!

பொருள்: தாயே! மருதாணி பூசிய உன் திருவடிகளை அபிஷேகித்த தீர்த்தத்தை பருகினால் கல்வியறிவு பெருகும், அனைத்து வித்தைகளிலும் தேறலாம் என அறிவேன். அந்த தீர்த்தத்தை நான் பருகுவது எப்போது? கூறுவாயாக! அந்த தீர்த்தம் சரஸ்வதி தன் வாயில் தரித்த தாம்பூல தீர்த்தத்திற்கு ஒப்பானதாகும். ஊமைகளைக் கூட அத்தீர்த்தம் பேசவைக்கும் தன்மையுடையது. அதை என் வாயில் எப்போது ஊற்றப் போகிறாய்?

(இந்த ஸ்லோகத்தை சொன்னால் கல்வியறிவு பெருகும். மலட்டுத்தன்மை நீங்கும் என்பது நம்பிக்கை)

நன்றி: தினமலர்

8.21.2005

இட ஒதுக்கீடு - பெரியார் பார்வையில்

காங்கிரசின் ஆரம்பகாலம்

....காங்கிரஸ் மாநாடுகளில் முதலாவதாக இராஜ விசுவாசப் பிரமான தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளையரை இந்நாட்டுக்கு அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடுழிகாலம் இருக்க வேண்டுமென்று வாழ்த்து செய்யப்படும். சென்னையில் 1915 இல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி ராஜவிசுவாசத் தீர்மானம் காலை ஒரு முறையும் மாலை கவர்னர் விஜயத்தின் போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்து வருகிறது. ஆகவே வெள்ளையர் வழங்கிய உத்தியோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகு தான் காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றேயொழிய அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித்தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்து வந்தது என்பது கண்கூடு.
-----

இன்றைய கட்டத்தில் எழுதப்பட்டதுபோல் தோன்றும் இக்கட்டுரையை முழுமையாக வாசிக்க... இங்கே அழுத்தவும்.

`ஜன்னல்’

`தினமணி’ ஏடு ஞாயிறுதோறும் `ஜன்னல்’ என்ற ஒரு பகுதியை வெளியிட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு பிரச்சினை வெடிக்கும் பொழுது, அது தொடர்பான பழைய தகவல்களைச் சேகரித்து வெளியிடுவது நல்ல முயற்சிதான் - புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும், பழைய தலைமுறையினர் மறந்தவற்றை நினைவூட்டிக் கொள்வதற்கும் இது பயன்படும்.

அப்படித் தகவல்களைச் சொல்லும்போது எதையும் மறைக்காமல் - ஒளிக்காமல் சொன்னால் தான், சரியான தகவல் களைச் சொன்னதாகப் பொருள்படும்.
இவ்வார `ஜன்னலில்’ இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் திருத்தம் பற்றி சொல்ல `தினமணி’ முயற் சித்துள்ளது.

செண்பகம் துரை ராஜன் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டதாகவும், அரசியல் சட்டப்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (பிற்பட்டவ ருக்கு என்று `தினமணி’ கூறியிருப்பது தவறு) இட ஒதுக்கீடு செய்ய வழி இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததாகவும், அப்பொழுது பிரதமராக இருந்த நேருவை அன்றைய முதல்வர் காமராஜர் வலியுறுத்தி, இட ஒதுக்கீடு கிடைக்க அரசியல் சட்டத்தில் உள்ள திருத்தத்தைச் செய்ய வைத்தார் என்றும் `தினமணி’ எழுதுகிறது.

1950,51-இல் காமராஜர் முதல்வராக இருந்தாரா இதுகூட தெரியாமல் `தினமணி’ எழுதுகிறதே!

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரி யாரும் திராவிடர் கழகமும், மாநாடு நடத்தியும், போராட்டம் பல நடத்தியும், மக்களிடத்திலே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தமிழகத் தலைவர்களும் அவரவர் பங்குக்குப் பாடுபட்டது என்பதை யெல்லாம் `தினமணி’ மறைக்கிறதே!

சென்னை மாகாணத்தில் நடக்கும் போராட்டங் களை பிரதமர் நேரு அவர்களே நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியது; அதன் அடிப்படையில் சட்டத் திருத்தம் செய்வதாக பிரதமர் நேரு சொன்னது போன்ற தகவல்கள் எல்லாம் `தினமணி’க்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் இருட்டடிக்கும் குசும்பா?

நன்றி: விடுதலை

காமராசர் 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் தமிழ் புத்தாண்டு தினத்தில்தான் முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.

கீதை தந்த கண்ணன்!

ஆக.26 கோகுலாஷ்டமி

கண்ணனின் கதை கேட்டால், அதற்கான காரணம் புரியும்.
சூரசேனம் என்ற நாடு பாரதத்தில் இருந்தது. இந்நாட்டின் மன்னன் நாட்டின் பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டான். அவனது பெயர் சூரசேனன். இவனுக்கு வசுதேவன், என்ற மகன் பிறந்தான். வசுதேவர், வாலிபன் ஆனதும் மதுராபுரியை ஆண்ட உக்கிரசேனன் என்பவனின் தம்பி மகள் தேவகியை திருமணம் செய்து கொண்டார். உக்கிரசேனனின் மகன் கம்சன். அவன் தன் சித்தப்பா மகள் தேவகி மீது மிகுந்த அன்புடையவன். எனவே, மணமக்களை தன் தேரிலேயே ஏற்றி, மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
ஊர் எல்லையை அடைந்ததும் வானத்தில் ஒரு ஒலி எழுந்தது.

"கம்சா! நீ எந்த தங்கையின் மீது பாசத்தைக் கொட்டுகிறாயோ, அவள் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும். நீ பூமியில் வாழும் மக்களுக்கு செய்யும் கொடுமைக்கு பரிசு இது!' என்றது.
கம்சன் ஆடிப் போனான். கண்ணாய் மதித்த தங்கையை காலால் மிதித்து கீழே தள்ளினான். ஓடும் தேரிலிருந்து விழுந்த அவள், ரத்த வெள்ளத்தில் மிதந்தாள். அவள் சாகாததைக் கண்ட கம்சன் வாளை ஓங்கி வெட்டச் சென்ற போது, கணவர் வசுதேவர் தடுத்தார்.

"மைத்துனா! கலங்காதே. எட்டாவது குழந்தையால் தானே உனக்கு சாவு. அக்குழந்தை மட்டுமல்ல, முதல் ஏழு குழந்தைகளையும் கூட உன்னிடமே தந்து விடுகிறேன். அவற்றை என்ன வேண்டுமானாலும் செய். பாசத்துடன் மதித்த தங்கையைக் கொல்லாதே!' என்றார்.
கம்சன் அதை ஒப்புக் கொண்டான். அவர்களை சிறையில் அடைத்து பாதுகாத்தான்.
இந்த எச்சரிக்கைக்கு பிறகும் கம்சன் திருந்தவில்லை. தன் தந்தை உக்கிரசேனனை சிறையில் அடைத்து விட்டு, ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றி, மதுராவின் அரசன் ஆனான்.

மதுராவில் வசித்த யாதவ குல மக்கள், அவனது கொடுமை தாங்காமல், பக்கத்து நாடுகளுக்கு சென்று விட்டனர். தேவகிக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. எல்லாக் குழந்தைகளையும் கொன்றான் கம்சன். ஏழாவது கர்ப்பம் தரித்தது. இதே சமயத்தில், கோகுலத்தில் வசித்த நந்தகோபன் என்பவரின் மனைவி ரோகிணி என்பவளும் கர்ப்பிணியானாள்.

அப்போது, ஸ்ரீமன் நாராயணன், தன் சகோதரி பார்வதியின் அம்சமான மாயை எனப்படும் துர்க்கையை அழைத்து, "கோகுலத்தில் கர்ப்பமாக இருக்கும் ரோகிணியின் வயிற்றுக்குள் நீ செல். அவள் வயிற்றில் இருக்கும் கர்ப்பத்தை கலைத்து விடு. அந்த இடத்தில் என் அம்சமாக தேவகியின் வயிற்றில் வளரும் கருவை வைத்து விடு. நந்தகோபருக்கு இன்னொரு மனைவி இருக்கிறாள். அவள் பெயர் யசோதை. அவள் வயிற்றில் நீ கருவாகத் தங்கிவிடு. உலக நன்மைக்காக இக்காரியம் செய்யும் உன்னை உலக மக்கள் காளியாகவும், சண்டியாகவும், துர்க்கையாகவும் வழிபடுவர்!' என்றார்.
துர்க்கையும் அப்படியே செய்தாள்.

ரோகிணியின் வயிற்றுக்குள் சென்ற அந்தக்கரு வளர்ந்தது. அவள் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றாள். அக்குழந்தையே பலராமன் எனப்பட்டான்.
தேவகிக்கு கர்ப்பம் கலைந்த செய்தியால் கம்சன் நிம்மதியடைந்தான். அடுத்து, அவளுக்கு ஏற்படும் கர்ப்பமே தனக்கு எமன் என்பதை உணர்ந்த அவன், காவலை அதிகப்படுத்தினான். தேவகியும் கர்ப்பமானாள்.

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, தன் அண்ணனின் பெயர் தாங்கிய தாயான ரோகிணிக்கு பெருமை தரும் விதத்தில் அவளது பெயர் கொண்ட நட்சத்திரத்தில், நள்ளிரவு நேரத்தில் நாராயணன் பூவுலகில் அவதாரம் செய்தார். கண்ணுக்கு இமை போல், உலகத்தை பாதுகாக்க வந்ததால், தேவகி தன்னையறியாமல் அவனை "கண்ணா' என அழைத்தாள்.

இதே நாளில், சற்று நேரத்தில் யசோதையின் வயிற்றில் துர்க்கை அவதரித்தாள். கண்ணனும், துர்க்கையும் அண்ணனும், தங்கையுமாய் அவதாரம் செய்த நன்னாளே கோகுலாஷ்டமி எனப்படுகிறது.

கண்ணன் பிறந்த போது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் காட்சி தந்தான். அவர்கள் அவனை வணங்கி, சாதாரண குழந்தை வடிவாகும்படி கேட்டனர். அவ்வாறே அவன் ஆனான். தன்னை கோகுலத்தில் நந்தகோபர் மனைவி அருகில் படுக்க வைத்து விட்டு, யசோதைக்கு மயக்கம் தெளியும் முன் அவளுக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைக்கு தூக்கி வர கட்டளையிட்டான். காவலர்களை உறங்க வைத்தான்.
நந்தகோபர் சிறையைத் திறந்து வெளியே சென்றார். யமுனைக் கரையிலுள்ள கோகுலத்திற்கு சென்று, பெண் குழந்தையை தூக்கி வந்தார்
. தங்கைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என கேள்விப்பட்ட கம்சன் அதைக் கொல்ல வந்தான்.
காலைப் பிடித்து துõக்கி ஓங்கி அடிக்க முயலும் போது, அது விஸ்வரூபம் எடுத்து பயங்கரமாக காட்சியளித்தது.

"உன்னைக் கொல்பவன் கோகுலம் சென்று விட்டான். நான் துர்க்கை. என் காலைப் பிடித்து துõக்கியதால், என்னை சரணடைந்ததாக கருதி, உன்னை விட்டு விடுகிறேன். என் பாதம் சரணடையும், கெட்டவர்களும் நற்கதியே அடைவர். நீ நாராயணனின் கையால் அழிவாய்!' என்றாள்.

அதன்படியே கம்சனைக் கொன்ற கண்ணன், பெற்றவர்களை விடுவித்தான்.
கம்சனின் மனைவியரான அஸ்தி, பிராஸ்தி ஆகியோர் கண்ணன் மீது கடும் கோபம் கொண்டனர். அவர்கள் மகத நாட்டு மன்னன் ஜராசந்தனின் புத்திரிகள். மகள்கள் கணவனை இழந்து வருந்துவதைக் கண்ட ஜராசந்தன் கண்ணனைக் கொல்ல முடிவெடுத்தான். அவனோடு வந்த வீரர்களில் பெரும்பாலோர் பாவிகள்.
இந்நேரத்தில் பூமாதேவி கண்ணனிடம் வந்து, அந்தப் பாவிகளைக் கொன்று, தன் பாரத்தை தணிக்க வேண்டிக் கொண்டாள். கண்ணனும், பலராமனும் இணைந்து அவனைத் தோற்கடித்தனர்.

பின்னர், பாண்டவர்களுக்கு உதவியாக வந்த கண்ணனை "கிருஷ்ணா' என உலகம் அழைத்தது. அவர் அர்ச்சுனனுக்கு உபதேசித்த நன்மொழிகள் "பகவத்கீதை' என்ற பெயரில் பாரெல்லாம் புகழ்பெற்று விளங்குகிறது.

கண்ணன் இளமையில் செய்த சேஷ்டைகளை நினைவு கூறும் வகையில், கோகுலாஷ்டமியன்று உறியடித் திருவிழா நடக்கும். வீடுகளில் கண்ணனின் பாதம் பதித்த கோலம் போட்டு, நெய் பண்டம், வெண்ணெய் படைத்து வழிபடுவர்.
குழந்தைக் கண்ணனை வரவேற்க நாமும் தயாராவோமே!

நன்றி: தினமலர்

8.20.2005

கேள்விக்குறியாகும் பா.ஜ.க.வின் பயணம்

ஒழுக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் உதாரணமான அரசியல் கட்சி ப.ஜ.க. மட்டுமே என்று மார்தட்டிய காலம் ஒன்று இருந்தது. சமீப காலமாக அந்த எண்ணம் சரிந்து வருவதை இந்திய மக்கள் அறிவார்கள்.

ஏற்கனவே அத்வாணி அணி, வாஜ்பாய் அணி என்று இருவேறு துருவங்களாக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பிரிந்திருந்தாலும், அத்வாணிய் வாஜ்பாய் இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை, இருவரும் சங் பரிவார் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான் என்று சப்பைக் கட்டுகள் கூறப்பட்டன.

கடந்த ஆண்டு தேர்தலின் போது ஏற்பட்ட அடியிலிருந்து கட்சியை மீட்டுடெடுக்கும் பணியில் ஈடுபட்ட அத்வாணி அவர்கள், அவரைவிட அவரின் எதிரியான வாஜ்பாய் அணிந்திருக்கும் மதச்சார்பின்மை முகமூடியே இந்திய மக்களை கவருவதற்கான சிறந்த வழி என்பதை உணர்ந்து, பாகிஸ்தான் பயணத்தை அதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி சோதனை முயற்சியை மேற்கொண்டார். மக்களிடம் நல்ல ஆதரவு இருந்தாலும் பரிவாரங்களின் தலைமைக்கு பதில் சொல்ல முடியாமல், முகமூடியை தற்காலிகமாக கழற்ற முயற்சி செய்த போது, அயோத்தியில் நடைபெற்ற தீவிரவாதம் அவருக்குப் பெரும் பேராய் அமைந்தது.

சலசலப்பெல்லாம் அடங்கிவிட்டது. பா.ஜ.க.வில் இனி கோஷ்டிப்பூசல் இல்லை என்ற நிலையில் இந்தியாவின் ஹிட்லர் மோடியை அவரது கட்சிக்காரர்களே எதிர்க்கத் துவங்க, நீறு பூத்த நெருப்பாய் இருந்த பூசல் இன்று வீதிக்கு வந்துவிட்டது.

மதன்லால் குரானா பா.ஜ.க.வின் சாதாரண தொண்டர் இல்லை. தலைநகர அரசின் முதலமைச்சராக இருந்தவர். ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்தவர். சங்பரிவாரத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நீக்கத்திற்கான காரணம் அவர் எழுதிய இரு கடிதங்கள்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பது இதுதான்...... சீக்கியருக்கெதிரான கலவரத்திற்கான பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சீக்கியர்களிடம் மன்னிப்புக் கேட்டது போல், குசராத்தில் முசுலிம்களுக்கெதிரான கலவரத்திற்கு பொறுப்பேற்று அத்வாணி அவர்கள் முசுலிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
குரானா உண்மையிலேயே மதச்சார்பின்மைவாதியாக மாறிவிட்டாரா? அல்லது அத்வாணியைப் போல் இதுவும் ஒரு நாடகமா? பொறுத்திருந்து பார்ப்போம்.....

என்ன ஆனாலும், இனி சோ போன்றவர்கள் காங்கிரசின் உட்கட்சிப் பூசலை பெரிதுபடுத்த முடியாதென்பது என்னனவோ உண்மை.

8.19.2005

மாயவரம் - சில சிறப்புத் தகவல்கள்

‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் போலாகுமா?’ என்பார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்தது, மாயூரம் என்னும் மயிலாடுதுறை.

பிரம்மா படைப்புத் தொழிலைத் துவங்க உத்தரவு பெற்ற ஊர் எது?
விநாயகரும், முருகனும் வழிபட்ட ஆலயம் எது?
நந்திதேவர் சாபம் விலகிய இடம் எது?
லட்சுமியும், சரஸ்வதியும் தொழுத ஊர் எது?
கங்கை முக்தியடைந்த தலம் எது?
மன்மதன், அகத்தியர், கண்வ ரிஷி ஆகியோர் பூஜை செய்த கோயில் எது?
எல்லாம் இந்த மயிலாடுதுறைதான்.

அபயாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி திருக்கோயிலைச் சுற்றிப் பார்க்க, இரண்டு மணி நேரமாவது வேண்டும். 3,78,913 சதுரஅடியில் அமைந்த பிரமாண்டமான கோயில் இது. நான்கு பக்கச் சுற்றுமதில்களுடன் கிழக்கே பெரிய ராஜகோபுரம், நம்மை ‘வா, வா’ என்று அழைக்கிறது.

உள்ளே நுழைந்தால், கொடி மரத்துக்குத் தெற்குப்பக்கத்தில் தலவிநாயகர், பெரிய விநாயகர் என்ற பெயரில் நம்மை ஆசிர்வதிக்கிறார். வடக்கே அவரது தம்பி ஆறுமுகன்.
வெளிப்பிராகாரத்தில் வடக்கு மதிலையட்டி கிழக்கு முகமாக ஒரு சிறு கோயில் இருக்கிறது. சாதா பார்வையிலிருந்து தப்பிவிடும் அந்த சன்னதியை, கட்டாயம் அனைவரும் தரிசனம் செய்யவேண்டும். ஏன்? அதுதான் ஆதிமாயூரநாதர் சன்னதி. அங்கே சிவலிங்கத்தின் பக்கத்தில் இருந்தபடி மயில் ஒன்று பூஜைசெய்து கொண்டிருக்கிறது. யார் அந்த மயில்? பார்வதிதேவிதான். மயிலாடுதுறை என்று ஊருக்கே பெயர் வரக் காரணம், அந்த மயில்தான். (அதை கதைப் பகுதியில் பார்க்கலாம்.)

அருகில், அகத்திய விநாயகர் சன்னதி இருக்கிறது. அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்டவர் இந்தப் பிள்ளையார். வெளித்திண்ணையில் இன்னுமொரு விநாயகர். பெயர்? கணக்குப் பிள்ளையார்.

இவர்களையெல்லாம் தரிசனம் செய்துவிட்டு வடக்கு நோக்கிச் சென்றால் அபயாம்பிகை சன்னதியை அடையலாம். அங்கே நுழைந்ததுமே அன்னையின் கருணைவெள்ளம் நம்மை இழுக்கிறது. தாய் தன் குழந்தையை இரு கைகளையும் நீட்டி அழைப்பதுபோல் இருக்கிறது. அபயாம்பிகை, நான்கு கரங்களுடன் எழுந்தருளியிருக்கிறாள். மேலிரு கரங்களில் சங்கு, சக்கரம் இருக்கிறது. இடது கரம் கீழாகத் தொங்க, வலது கையில் கிளி ஒன்றை ஏந்தி அபயம் அளிக்கிறாள். புன்முறுவலுடன், அருளே உருவாய் பக்தர்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள் தேவி. அஞ்சல் நாயகி, மயிலம்மை போன்ற பெயர்களும் இவளுக்குண்டு.

அம்பாள் சன்னதிக்கு அடுத்த சன்னதியில், அனவித்யாம்பிகை என்ற போர்டு தொங்குகிறது. எட்டிப் பார்த்தால், உள்ளே ஒரு சிவலிங்கம்தான் இருக்கும். ‘என்னப்பா இது, விக்ரஹத்தை மாற்றிகீற்றி வைத்துவிட்டார்களா?’ என்று தோன்றும். விஷயம் வேறு.
நாதன்சன்மன் என்பவன், கயிலையில் ஈசனுக்குப் பணிபுரியும் பாக்கியம் பெற்றவன். அவன் இந்த மயிலாடுதுறைக்கு வந்து ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு முக்தியடைந்தான். அவனுடைய மனைவிதான் அனவித்யை. கணவனைப் போலவே மனைவியும் அந்த சிவபெருமானை வழிபட்டு சிவலிங்கத்தை பூஜித்து, அந்த சிவலிங்கத்துக்குள்ளேயே உட்புகுந்து மறைந்து, சிவபதத்தை அடைந்தாள். அதனால் அந்த லிங்கம், அவளது பெயரால் அனவித்யாம்பிகை என்று அழைக்கப்படுகிறது.
ஊன்றி அந்த லிங்கத்தைப் பார்த்தால், இன்னொரு விஷயம் புலப்படும். லிங்கத்துக்குப் புடவைதான் சாத்துகிறார்கள்.


‘நீற்றினான் நிமிர்புன்சடையான் விடைஏற்றினான் நமையாளுடையான் புலன்மாற்றினான் மயிலாடுதுறையென்றுபோற்றுவார்க்கு முண்டோ புவி வாழ்க்கையே’
என்று திருநாவுக்கரசு சுவாமிகளின் திருப்பதிகத்தைப் பாடியபடியே இப்போது மூலவரை தரிசனம் செய்யலாமா?

லிங்க உருவில் தரிசனம் தருகிறார் மாயூரநாத சுவாமி. பிரம்மலிங்கம், வள்ளலார், மயிலாடுதுறையான், அஞ்சொலாளுமைபங்கன் என்று ஏகப்பட்ட பெயர்கள் இவருக்கு உண்டு. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றவர்களால் பாடப்பட்ட இந்த மாயூரநாதரின் பெருமைகளைச் சொல்லி மாளாது. பார்வதியுடன் இந்தத் தலத்தில் மகிழ்ச்சியோடு மாயூர தாண்டவம் ஆடியவர் இவர்தான். ஆனந்தமாக இங்கு இருக்கும் இறைவன், வணங்கும் பக்தர்களுக்கும் ஆனந்தத்தை அள்ளி அள்ளி அளிக்கிறார்.
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இத்திருக்கோயிலில் எண்ணற்ற திருவிழாக்கள் உண்டு. அனைவருக்கும் தெரிந்த விழா, கடைமுழுக்கு. ஐப்பசித் திங்களின் இறுதிநாளில் நடக்கும் பெரும் தீர்த்த விழா இது. அன்றைக்கு நாடெங்கிலுமிருந்து மக்கள் இங்கே கூடுகிறார்கள். மாயூரநாதர் கோயிலின் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு வந்து காவிரியில் தீர்த்தம் கொடுத்து அருளும் புண்ணிய நிகழ்ச்சி அது.
கார்த்திகை மாத முதல்நாள் விடியற்காலையில் கடமுழுக்கு நடைபெறுகிறது. கடைமுழுக்கில் முழுகிய மக்கள், கடமுழுக்கிலும் மூழ்கினால்தான் பலன் உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அது என்ன முடமுழுக்கு?
இங்கே கடைமுழுக்கில் நீராட, நெடுந்தொலைவிலிருந்து முடவன் ஒருவன் கிளம்பிவந்தான். அவன் வருவதற்குள் கடைமுழுக்கு விழா முடிந்துவிட்டது. முடவன் மிகவும் வருத்தப்பட்டு ஈசனிடம் முறையிடவே, ‘‘கவலைப்படாதே... நீ, நாளை சூரிய உதயத்திற்கு முன் ரிஷப தீர்த்தத்தில் நீராடு. துலாமாதம் முழுவதும் நீராடிய பலன் உனக்குக் கிடைக்கும்’’ என்று மாயூர நாதர் கூறி மறைந்தார். அப்படியே அவனும் செய்து முக்தியடைந்ததாக புராணம் சொல்கிறது.

துலாக்கட்டம் என வழங்கும் காவிரித்துறையில், ஆற்றின் நடுவில் ரிஷபப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார். ரிஷபத்தின் கர்வத்தை ஈசன் அடக்கிய இடம் இது.
தீபாவளி_அமாவாசையன்று கங்கை முதலிய எல்லா புண்ணிய நதிகளும் இங்கே காவிரியில் நீராடி தங்கள் பாபங்களைப் போக்கிக்கொள்வதாக ஐதிகம். அன்றைய தினம், காவிரிநீரை கரகத்தில் எடுத்து, எத்தனை ஆண்டுகள் வைத்திருந்தாலும் நீர் கெட்டுப்போவதில்லை என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதோ இப்போது, ‘மயிலாடுதுறை’ என்று பெயர் வந்த கதையைப் பார்க்கலாமா?
பிரம்மபுரம்
பிரளயம் தோன்றி, உலகம் மறைந்து, மீண்டும் பூமி பூப்பூக்கும் நேரம்.
மகாவிஷ்ணுவின் நாபியில் தோன்றிய பிரம்மா, சிவபெருமானை வணங்கினார். ‘‘இறைவா, மீண்டும் எனக்கு படைக்கும் ஆற்றலைத் தந்தருள்க’’ என்று வேண்டினார்.
‘‘அப்படியே ஆகட்டும்’’ என்று அருள்பாலித்த இறைவன், ‘‘பிரம்மனே இந்த வனம், இனி உன் பெயரால் பிரம்மவனம் என்று பெயர் பெறும். இங்கே சிவலிங்கம் ஒன்று உனக்குக் கிடைக்கும். அதற்கு ஓர் ஆலயம் எழுப்பி சுற்றிலும் ஒரு நகரத்தையும் உருவாக்குவாயாக’’ என்றும் ஆணையிட்டார்.

பிரம்மாவும் அவ்வாறே செய்து ஈசனின் அருளைப்பெற்றார். சிருஷ்டித் தொழிலை மீண்டும் ஆரம்பித்தார். உதவிக்கு ஏழு முனிவர்களைப் படைத்தார். துணைபிரம்மன்களையும் உருவாக்கினார். அவர்களில் ஒருவன்தான் தட்சன்!
அந்த பிரம்மபுரம்தான் தற்போதைய மயிலாடுதுறை.

தாட்சாயணி
தட்சனின் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
தட்சனின் மகள், பார்வதியான தாட்சாயணி. மாப்பிள்ளை, சிவபெருமான்.
தட்சன் இறைவனை மதிக்காமல், அழைக்காமல் ஒரு யாகம் செய்யத் துவங்கினான்.
இறைவனிடத்தில் ஒருவாறு அனுமதிபெற்று, அந்த யாகசாலையை அடைந்தாள் தாட்சாயணி.

பெற்ற மகளையே அவமதித்தான் தட்சன்.
தாட்சாயணி சினம் கொண்டாள். உலகமே நடுங்கிற்று. அப்போது ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஓர் அழகிய மயில், பயத்துடன் பறந்து, தாட்சாயணியின் கூந்தலைக்கண்டு ‘இதுவும் தன் மயில் இனம்தான்’ என்று நினைத்து, அம்மையை வந்தடைந்தது.
‘‘அஞ்சாதே’’ என்று மயிலுக்கு அபயம் தந்து, அனுப்பி வைத்தாள் தாட்சாயணி.
பின்னர் தட்சனின் யாகத்தை நிறுத்தக்கருதி, அந்த யாகத்தீயில் தியாகத் தீயாய் விழுந்து மறைந்தாள்.

மயில்
நடந்ததையெல்லாம் நாரதர் மூலம் அறிந்த சிவபெருமான், சினத்துடன் வீரபத்திரராகப் புறப்பட்டார்.
அப்போது அங்கே உடல் இல்லாமல் உயிர் தாங்கி நின்ற தாட்சாயணியை நோக்கினார். தந்தையின் அவமதிப்பால், தந்தை தந்த உடலையே அழித்த தேவியை பாசத்துடன் பார்த்தார்.

‘‘தேவி, நீ ஒரு மயிலுக்கு அடைக்கலம் தந்து இரக்கப்பட்டதால், நீயும் மயில் உருக்கொண்டு எம்மை பூஜிப்பாயாக. நானும் ஒரு மயிலாகத் துணையாக இருப்பேன்’’ என்று கூறி மறைந்தார்.
உடனே, பார்வதிதேவி மயிலாக மாறினாள். அவள் வந்து இறைவனை பூஜித்த இடம்தான் பிரம்மவனம்.

ஈசனும் ஆண் மயிலாக மாறினார். இருவரும் இணைந்து ஆனந்த நடனம் ஆடினார்கள். மயூர தாண்டவம் _ மயில் நடனம். (இன்றும் துலாமாதம் ஐந்தாம் திருநாளில் ஆனந்த மயூர நடனத்தைக் கண்டு களிக்கலாம்).

அஞ்சல் நாயகி
பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கிற்று. ‘‘பிரம்மா ஸ்தாபித்த இந்த பிரம்மதீர்த்தத்தில் மூழ்கி, சிவலிங்கத்தை பூஜிப்பாயாக’’ என்றது.
அதைக் கேட்ட பார்வதிதேவி, மனமகிழ்வுடன் பிரம்மதீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உரு நீங்கி, தேவியாக சுய உருப் பெற்றாள்.

சிவமயிலும் சிவபிரானாக மாறி, ‘‘என்ன வரம் வேண்டும் தேவி?’’ என்றார்.
அப்போது அம்மை, ‘‘கௌரியாகிய நான் மயில் (மாயூரம்) உருக்கொண்டு பூஜித்ததால், ‘கௌரி மாயூரம்’ என்ற பெயர் இந்த ஊருக்கு வரவேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்படவேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலாமாதத்தில் இங்கே வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்’’ என்று வேண்டினாள்.
‘‘எல்லாம் தந்தேன்’’ என்ற இறைவன், ‘‘ஓடி வந்த மயிலுக்கு ‘அஞ்சேல்’ என்று நீ அபயக்கரம் தந்ததால், ‘அஞ்சல்நாயகி’ என்ற பெயரும் உனக்கு உண்டாகும். வணங்கும் பக்தர்களையும் ‘அஞ்சேல்’ என்று அபயம் தந்து காத்தருள்வாயாக’’ என்று ஆசிர்வதித்தார்.

நன்றி: குமுதம் பக்தி

8.18.2005

சவுந்தர்ய லஹரி (97) - வாக்கு வன்மை, உடல்உறுதிக்கு

கிராமாஹுர் தேவீம் த்ருஹிண
க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ
ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம்
நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி
பரப்ரஹ்ம மஹிஷி!!

பொருள்: சிவனோடு இணைந்த பராசக்தியே! உன்னை பிரம்மனின் மனைவியான சரஸ்வதி என்றும், விஷ்ணுவின் மனைவியான லட்சுமி என்றும், சிவனின் மனைவியான பார்வதி என்றும் வேதத்தின் உட்பொருளை அறிந்தவர்கள் பலவாறாக பிரித்துக் கூறுகிறார்கள். ஆனால், நீயோ மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டு, எல்லையற்ற மகிமையை உடையவளாக விளங்குகிறாய். மகா மாயையாக இருந்து இவ்வுலகை ஆட்டிவைத்து பிரமிக்க செய்து கொண்டிருக்கிறாய்.

(இந்த ஸ்லோகத்தை சொன்னால் வாக்கு வன்மையும் உடல் உறுதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை)

நன்றி: தினமலர்

காயத்ரீ உபாசனை

காயத்ரீ மந்திரத்தின் மகிமை

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டுவிட்டவன் பிராமணணாக மாட்டான். அப்பேர்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்கிரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் பிராமணர்கள் என்று பெயராவது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்பிராமணன்; கெட்டுப்போன பிராமணன். கெட்டாலும் 'பிராமணன்' என்ற பேராவது இருக்கிறது!மறுபடியும் பிராமணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்று தலைமுறையாக விட்டுவிட்டால் பிராமணத்வம் அடியோடு போய்விடுகிறது. அவன் மறுபடியும் பிராமணனாக உறவுக்காரர்களாக உடையவன் அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன் தான்!

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப் பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப்படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அனாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக்கொள்ளவேண்டும். இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திரசக்தி இருப்பதற்கு தேஹத்தைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

' ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா ' என்ற (தைத்திரீய ஆரண்யக- வாக்குப் ) படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்;நூறு ஜபிப்பது மத்யமம்; அதம பக்ஷம் பத்து.
காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்ற ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்துக்காலத்திலும் ஜபம் பண்ணவேண்டும். இந்த மூன்று காலங்களும் சாந்தம் உண்டாகிற காலம். காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம். அப்பொழுது மனது சாந்தியாக இருக்கும். ஸாயங்காலம் எல்லோரும் வேலையை முடித்து ஓய்ந்திருக்கும் காலம். அதுவும் சாந்தமான காலம். மத்தியான காலத்தில் ஸ¨ரியன் உச்சியில் இருக்கிறான். அப்பொழுது மனத்துக்கு சாந்தமான காலம். இந்த மூன்று காலங்களிலும் காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்வதீ என்று மூன்று பிரகாரமாகத் தியானம் செய்யவேண்டும். காலையில் பிரம்ம ரூபிணியாகவும், மத்யான்னம் சிவ ரூபிணியாகவும், ஸாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்யவேண்டும்.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. ஹிப்னாடிஸம் என்பதால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்னாடிஸம் காயத்ரீ மந்திரம்!ஆசையையடக்கி ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்னாடிஸம் காயத்ரீ மந்திரம்! லோகக்காரியங்களைக் குறைத்துக்கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்யவேண்டும். அனாசாரத்தில் போகாமல் தேகத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும்!

ஸந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை. மற்றவையெல்லாம் அதற்கு அங்கமானவை. அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்துவிட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்கவேண்டும். 'அந்த இரண்டுதானே முக்கியம்? அவற்றை மட்டும் செய்து விடலாம்' என்றால் வரவர அவற்றுக்கும் லோபம் வந்துவிடும். ஆபத்திலும் அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால், அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும் அசக்தியுகமாகத்தான் இருக்கும் என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார். ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றிச் செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும். ஆபத்துக்காலத்திலுங்கூட அவற்றைச் செய்து வர வேண்டும். காலம் தப்பாமல் செய்யவேண்டும். பாரத யுத்தத்தின்போது ஜலம் அகப்படாதபோது கூட தூளியை (புழுதியை) வைத்துக் கொண்டு காலம் தவறாமல் ஸேனாவீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது!

அஸ்தமன காலத்திலும், உதயகாலத்துக்கு முன்பும், உச்சிக் காலத்திலும் அர்க்கியம் கொடுக்கவேண்டும். இடைகாட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். ஸித்தர்கள் வினோதமான காரியங்கள் பண்ணுவார்கள்;புதிராகப் பேசுவார்கள். இடைக்காட்டுச் சித்தர் ஆடு மேய்த்தார்! அவர், ' காணாமல் கோணாமற் கண்டு கொடு ! ஆடுகாண் போகுது பார் போகுது பார் ! என்று சொல்லி இருக்கிறார். 'காணாமல்'என்றால் காண்பதற்கு முன்பு என்பது அர்த்தம். அதாவது ஸ¨ர்யோதயத்திற்கு முன் காலை அர்க்கியம் கொடுக்கவேண்டும். 'கோணாமல்' என்பதற்கு ஸ¨ரியன் தலைக்கு நேரே இருக்கும் பொழுது என்பது அர்த்தம். அதாவது ஸ¨ரியன் மேற்காகச் சாய்வதற்கு முன் உச்சிக்காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்கவேண்டும். 'கண்டு'என்பதற்கு ஸ¨ரியன் இருக்கும்பொழுது என்று அர்த்தம். ஸ¨ரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலைவாயிலில் இருக்கும் பொழுதே ஸாயங்கால அர்க்கியம் கொடுக்கவேண்டும். இந்த விஷயங்களைத்தான் அந்த ஸித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார். 'ஆடு' என்றால் 'நீராடு'! அதாவது 'கங்கையில் ஸ்நானம் பண்ணு' என்பது அர்த்தம். 'போகுதுபார்' என்றால் 'த்ரிகால ஸந்த்யா வந்தனத்தாலும் ஸேது தரிசனத்தாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார்!'என்று அர்த்தம். காசிக்குப் போய் கங்கையை எடுத்துக்கொண்டு, ஸேதுவான ராமேச்வரத்துக்குப் போய் ராமநாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகம் பண்ணும் சம்பிரதாயத்தைத்தான் சொல்லியிருக்கிறார்!

காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும். அர்க்கியத்தையும் காயத்ரீயையும் தவறாமல் செய்துகொண்டு வரவேண்டும். ஜன்மத்தில் ஒரு தரமாவது கங்காஸ்நானமும் ஸேது தரிசனமும் பண்ண வேணும்.

ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால், கூட இருக்கிறவர்கள் அவனுக்காக ஸந்தியா வந்தனம் பண்ணித் தீர்த்தத்தை ஜ்வரம் வந்தவன் வாயில் விட வேண்டும். இப்பொழுது நமக்கு நித்தயப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது! ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்;அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போகக் காயத்ரீ மருந்து அவசியமானது, அதைக் எந்தக் காலத்திலும் விடக்கூடாது. மருந்தைவிட இதுதான் முக்கியமானது. ஒரு நாளாவது ஸந்தியாவந்தனத்தை விட்டுவிட்டோமென்று இருக்கக்கூடாது.

காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகின்ற காரியந்தான். இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீரப் பிரயாசையும் இல்லை. லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம். ஆயுள் இருக்கிறவரைக்கும் ஸந்தியா வந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ணவேண்டும்.

காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய் வடிவமாக) உபாஸிக்கவேண்டும். பகவான் பலவிதமான ரூபங்களில் வந்து பக்தர்களுக்கு கிருபை செய்கிறார். நம்மிடம் எல்லாரையும் விட அன்பாக இருப்பது மாதாதான். தாயாரிடம் எதை வேண்டுமானாலும் பயமில்லாமல் சொல்லலாம். பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதா வென்று வேதம் சொல்லுகிறது.
பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவற்றை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்துப் பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்திதான்;மன மாசு அகலுவதுதான். மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாகத்தான் இருக்கின்றன.அதுவே காயத்ரீக்கு நேரான பலன்; ஒரே பலன்.

இந்தக் காலத்தில் காலையிலும் ஸாயங்காலத்திலும் எல்லாரும் காலந்தவறாமல் ஸந்தியாவந்தனம் செய்யலாம். சீக்கிரம் ஆபீஸ¨க்கு போகவேண்டியவர்கள் மத்யான்ன வேளையில் வீட்டிலிருக்க முடியாதாகையால், பிராதஃ காலம் ஆனபின் அதாவது ஸ¨ர்யோதயத்திலிருந்து ஆறு நாழிகை (2 மணி 24 நிமிஷம்) கழித்து வரும் ஸங்கவ காலத்தில், அதாவது 8.30 மணி சுமாருக்கு மாத்தியான் ஹிக அர்க்கியத்தைக் கொடுத்து ஜபிக்கவேண்டும்.

அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றி திரிகால ஸந்தியோபாஸனை இல்லாமல் இருக்கவே கூடாது. அடியோடு முடியாமல் ஜ்வரம் வந்தால் மற்றவர்களிடம் 'கஞ்சி கொடு, தீர்த்தம் கொடு' என்று சொல்லுவதைப் போல, 'எனக்காக ஸந்தியாவந்தனம் பண்ணு'என்று சொல்லவேண்டும்.

மந்திர சக்தியானது அணையாமல் விருத்தியாகக் கிருபை செய்யவேண்டுமென்று பகவானை எல்லோரும் பிரார்த்திப் போமாக!

நன்றி: காமகோடி

8.16.2005

ரஜினி ரசிகர்களே!!

சூப்பர் ஸ்டார் என்ற என் பதிவிற்கு பதிலாக ராஜா ராமதாஸ் (மருத்துவர் அல்ல!) என்பவரின் ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு என்ற பதிவிற்கான எமது பதில்.

நான் ரஜினிக்கு எதிரானவன் அல்ல. ரஜினி ரசிகன் என்ற பெயரில் சிலர் செய்யும் கூத்துக்களுக்குத்தான் எதிரானவன். என்னுடைய பதிவில் நான் ரஜினியைச் சாடி எழுதவில்லை. மாறாக ரசிகர்களைச் சாடியே எழுதியிருக்கிறேன்.

பொதுவாக அவருடைய செயல்கள் சராசரி மனிதனைப்போன்றுதான் இருக்கின்றன. பெங்களூரில் பணிபுரியும் தமிழர்கள் கூட தமிழைத்தான் நேசிப்பார்கள். தங்களுடைய ஊர், மாவட்டம், மாநிலம் என்றுதான் அவர்களுடைய வட்டமும் விரியும். ரஜினியும் அப்படித்தான் செய்கிறார். சராசரி கண்ணோட்டத்தில் இது தவறான காரியம் அன்று. ஆனால் அவருக்கு ஒப்பீடு செய்வதற்கு என் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பயன்படுத்தும் ரசிகர்களின் செயல்களையே தவறு என்கிறேன்.

வாட்டாள் நாகராஜ் தன் குழந்தைகளை ஊட்டியில் படிக்கவைத்திருப்பதால் மட்டும் அவர் தமிழர்களுக்குச் செய்த கொடுமைகளை மானமுள்ள எந்த தமிழனும் மறக்க மாட்டான்.
கார்கில் நிதிக்கு நிதியளித்ததைக் குறிப்பிட்டிருந்தீர்கள். கார்கில் தமிழகத்திற்கு மட்டுமே உரிய பிரச்சனை அல்ல என்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை.

ரஜினிக்கு நாம் ஒன்றும் சும்மா கொடுக்கவில்லை என்ற உங்கள் வாதம் உப்பிட்டவனுக்குச் செய்யும் துரோகம் என விளங்கிக் கொள்ஞங்கள். தமிழர்கள் அவருடைய திரைப்படங்களை (அது நன்றாக இருந்ததோ இல்லையோ) சென்று பார்த்ததினால்தான் அவர் இந்த நிலையை அடைந்தார். தமிழர்கள் எனக்குறிப்பிடுவதை ரசிகர்களாகிய உங்களையும்தான். நீங்களும் நாமும்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைக் கொடுத்தோம். நடிக்க வரும்போதே அவர் கொண்டு வந்த பட்டம் அல்ல.

என்னுடைய தருமம் குறித்து கேட்டீர்கள். அவரைப்போல் நான் சம்பாதிப்பவன் அல்லன். வருடத்திற்கு இலட்ச ரூபாய் சம்பாதித்தாலே அதிகம். இருந்தாலும் என்னால் முடிந்த தருமங்களைச் செய்தே வருகிறேன்.

இறுதியாக: உங்களுடைய பதிவுக்கு உங்கள் பதிவிலேயே அனானிமஸாக வந்து, இரு வார்த்தை உங்களையும் அவரையும் திட்டி எழுதியிருக்கலாம். அல்லது கண்ணாடி என்பவர் உங்களது பதிவையே வஞ்சப்புகழ்ச்சியா எழுதியிருப்பது போல் நானும் ஒரு பதிவு இட்டிருக்கலாம். இவ்வளவு பொறுமையாக எழுதக்காரணம் உண்மை நிலையை நீங்கள் உணர வேண்டும் என்பதுதான். ரஜினியின் படத்தைப் பாருங்கள். ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இருக்கிற சாமிகள் போதும்.

தமிழகத்தில் ஒரு மழைக்காலம்!

இந்தியாவின் அனைத்து செய்தித்தாள்களிலும் இப்படி செய்திகள் அமைந்திருந்தது.

தமிழ் நாட்டில் கடும் மழை!

தமிழ் நாட்டில் காவிரி பிடிப்புள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் தமிழ் நாட்டின் அணைகள் வேகமாக நிரம்புகின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநில விவாசியிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரியிலிருந்து தமிழ் நாடு தண்ணீர் திறக்கும் நாளை ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர்.

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடகம் மத்திய அரசை வலியுறுத்துகிறது!

தமிழ் நாட்டில் கடும் மழை பெய்து, அங்குள்ள அணைகளில் நீர் நிரம்ப ஆரம்பித்துள்ள நிலையில், தமிழ்நாடு கர்நாடகாவிற்குத் தரவேண்டிய 120 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என்று மத்திய அரசை கர்நாடக முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் தேவகவுடாவின் ஜனதா தளம், மத்திய அரசு தமிழ் நாடு அரசை நிர்ப்பந்தப்படுத்தி தண்ணீர் திறக்கச் செய்ய வேண்டும் என்று கூறினார். கர்நாடக எல்லையில் அமைந்துள்ள மேட்டூர் அணை நிரம்பி வழிவதாக அவர் கூறினார். தமிழ் நாடு கர்நாடகாவுக்கு தண்ணீர் தர மறுத்தால், தமிழ் நாடு அரசைக் கலைக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. கர்நாடக மாநிலப் பிரிவு கூறியுள்ளது.

முல்லைச் சேட்டன் அணையில் 136 அடிக்குமேல் தண்ணீர் தேக்க அனுமதிக்க மாட்டோம்! தமிழ் நாடு அரசு அறிவிப்பு!!

கேரளாவுக்குச் சொந்தமான ‘முல்லைச் சேட்டன் அணை’ தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் கடும் மழை பெய்வதைத் தொடர்ந்து, இந்த அணை அதன் 150 அடி கொள்ளளவில் 136 அடிவரை நிரம்பியுள்ளது. 136 அடிக்கு மேல் நீர் தேக்க கேராளவை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ் நாடு நீர் வளத்துறை அமைச்சர் கூறினார். ஆனால் கேரளாவோ, கடந்த சில வருடங்களாக கடும் வறட்சி நிலவி வந்ததைத் தொடர்ந்து வரும் ஆண்டுக்கு 136 அடி போதாது. 145 அடி வரை நீர் தேக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது. இது தொடர்பாக கேரளாவில் இந்த அணையை ஒட்டியுள்ள மாவட்ட மக்கள் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.

தமிழ் நாட்டிற்குப் போதிய தண்ணீர் இல்லை!

கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோருவது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “தமிழ்நாட்டில் தற்போதுதான் அணைகள் நிரம்பி வருகின்றன. சென்னை முதல் கண்ணியா குமரி வரையுள்ள அனைத்து மாவட்டங்களிலுமுள்ள அணைகள் நிரம்பிய பின் கர்நாடகாவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.

நடிகர்கள் போராட்டம்!!

இதற்கிடையில் கர்நாடகாவுக்கு தமிழ் நாடு தண்ணீர் தரக் கூடாது என்று நடிகர்கள் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்த் திரை உலகின் தாத்தா தலைமையில் நடைபெற்ற இந்த பேராட்டத்தில் திரைத்துறையைச் சேர்ந்த அனைவரும் பங்குபெற்றனர்.

இந்த பேராட்டத்தைப் பற்றிய தகவல்கள் வெளிவந்தவுடன் கன்னட பத்திரிக்கைகளில், கன்னட நடிகர்கள் ஏன் பேராடவில்லை என்று அவர்களைக் கண்டித்து செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, கன்னட திரை உலகின் அவசரக் கூட்டம் நேற்று மாலை பெங்களூரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தமிழ் நாடு அரசின் நிலைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பெங்களூரில் உள்ள கனினி தொடர்பான வேலைகளில் தமிழர்களைச் சேர்க்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி, மென்பொருள் நகர் அருகே மாபெரும் கூட்டம் நடத்தினர். கன்னட உலகின் முடிசூடா மன்னன் மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை. அவர் பெங்களூரில் உள்ள விதான் சபா அருகே அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் கன்னட திரை உலகத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

குஜராத், பஞ்சாப், அஸ்ஸாம், மகாராஷ்டிரா (நிறைய சோகத்துடன்), கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற நாட்டின் அனைத்து பகுதியிலும் கடும் மழை - அதனால் வெள்ளப் பெருக்கு, உயிர் சேதம் என்று செய்திகள் வரும்போது தமிழ் நாட்டில் மட்டும் (மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி தவிர்த்து) வெய்யிலின் கொடுமை இன்னும் தனியாத நேரத்தில் இன்று, சுமார் 4.45 மணிக்கு சென்னை மாநகர் இலேசாகக் குளிர்ந்த போது (ஆமாங்க! மெய்யலுமே மழைதான்! சுமார் முப்பது நிமிடங்கள் மட்டுமே!!) என் மனதில் ஏற்பட்ட சுவையான கற்பனைகள் இவை. செய்தியின் சுவராஸ்யத்திற்காக மட்டுமே நடிகர்களை இதில் சம்பந்தப்படுத்தி உள்ளேன். என் முந்தைய பதிவுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

சூப்பர் ஸ்டார்

தமிழன் மானமிழந்துவிட்டான் என்று தேர்தல் தோல்வியின்போது கருணாநிதி குறிப்பிடுவார். ஆனால் உண்மையிலேயே மானமிழந்த ஈனப்பிறவிகள் சில இருக்கத்தான் செய்கின்றன என்பதை ரஜினி-31 மற்று லகலக போன்ற பதிவுகளை படிக்கும்போது ஏற்படத்தான் செய்கின்றது.

''உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்'' என்று தன் சினிமாக்களில் பாடல்களை வைத்து, அந்த படத்தை வெற்றியடையச் செய்து பணம் சம்பாதிப்பதோடு அவரின் நன்றியும் முடிவுக்கு வந்து விடுகிறது.

தமிழர்களை வேட்டையாடிய கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ்தான் இவருக்குப் பிடித்த பேச்சாளர். அந்த வெறியனின் பேச்சு எப்படி இருக்கும் என்பதை, கர்நாடகாவில் தமிழர்கள் வேட்டையாடப்பட்டபோது அங்கிருந்த தமிழர்களையும், அப்போது வெளிவந்த செய்தித்தாள்களையும் படித்துப் பார்த்தால் தெரியும்.

அவரின் தாய்மொழி கன்னடம் என்பதால் கன்னட பேச்சாளரையே பிடிக்கும் என்பது உண்மை. அப்படி அவருக்குப் பிடித்த பேச்சாளர் தமிழர்களுக்கு விரோதமான பேச்சுக்களைப் பேசுபவர் என்பது அவருக்குத் தெரியத்தானே செய்யும். உப்பிட்ட தமிழ் மண்ணுக்கு தன் தாய்மொழியை விட்டுக் கொடுக்க சொல்லவில்லை. குறைந்தபட்சம் தனக்குப் பிடித்த பேச்சாளர் உங்களுடைய விரோதிதான் என்பதையாயவது அவர் வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

இந்த நேரத்தில் கர்நாடகாவிலிருந்து வந்த மற்றொரு நடிகரான பிரகாஷ்ராஜையும் நினைத்துப் பார்க்கிறேன். இவர் ஒரு படத்திற்கு பத்து கோடி, பதினைந்து கோடி வாங்கும் சூப்பர் ஸ்டார் இல்லையென்றாலும் உப்பிட்ட தமிழ் மண்ணுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தமிழ் சினிமாவில் முதலீடு செய்வது, பொதுநலச் சேவைகளில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை கொடுப்பது, தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்களுக்கு பாராட்டுவிழா நடத்துவது என்று எத்தனையோ விஷயங்களில் முன்னோடியாக இருக்கிறார்.

எனவே தமிழர்களே!! உங்களுக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவர்தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று நீங்கள் கருதினால் பிரகாஷ் ராஜ்தான் அதற்கு முழுமையான தகுதி பெற்றவர் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

8.15.2005

அனுமந்தபுரம் வீரபத்திரர்

சிவனின் அவதாரங்களில் ஒன்றான அகோர வீரபத்திரர் காஞ்சிபுரம் மாவட்டம் அனுமந்தபுரத்தில் சுயம்புமூர்த்தியாக தனிக்கோயிலில் இருக்கிறார். 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இத்தலம்.

வீரபத்திரர் தோற்றம்: சந்திரன் தன் மனைவியரைக் கவனிக்காத காரணத்தால் பெற்ற சாபத்தினால் தனது தொழிலை சரிவர செய்ய இயலாமல் போனது. இதையறிந்த தேவர்கள் சிவனிடம் வேண்டி மீண்டும் சந்திரனின் இயக்கம் நடைபெற அருள்பெற்றார்கள். இதனால் கோபம் கொண்ட சந்திரனின் மாமனார் தட்சன் சிவனை அவமதித்தான்.
புலஹ முனிவர் தட்சனை சாந்தம் செய்தார். இருந்தும் தட்சன் திருந்தவில்லை. எனவே முனிவர் தட்சனின் யாகம் அழியட்டும் என சாபம் கொடுத்து சென்றார்.

தட்சன் விஷ்ணுவை முன் நிறுத்தி யாகத்தை தொடங்கினான். இதனால் பல துர்சகுனங்கள் தோன்றின. வருத்தமடைந்த நாரதர் கைலாயம் சென்று சிவனிடம் நடந்தவைகளைக் கூறினார். சிவனும் தட்சனிடம் அவிர்பாகம் பெற்று வர நந்தியை அனுப்பினார். தட்சன் நந்தியை அவமானப்படுத்த, அவரும் தட்சனுக்கு சாபம் கொடுத்து கைலாயம் திரும்பினார்.
இப்படியே அனைவரும் சாபம் கொடுத்தால் தன் தந்தையின் நிலைமை என்னாவது? என்று தவித்த பார்வதி தன் கணவன் பரமேஸ்வரனிடம், தட்சனிடம் தான் சென்று அவிர்பாகம் பெற்று வர சம்மதம் கேட்டாள். சிவன் தடுத்தும் கேளாமல் தான் மட்டும் வந்து அவிர்பாகம் கேட்டு அவமானப்பட்டாள். தந்தையென்றும் பாராமல் தட்சனுக்கு சாபம் கொடுத்து விட்டாள்.

கயிலை திரும்பிய மனைவியிடம் கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். பார்வதியும் ருத்ர தாண்டவம் ஆடினாள். சிவனிடம் இருந்து வெளிப்பட்ட வியர்வை நீர் கொதித்து அதிலிருந்து "அகோர வீரபத்திரர்' தோன்றினார். பார்வதியின் தாண்டவத்தில் கால் சிலம்பு உடைந்து ரத்தினங்கள் சிதறி பத்ரகாளி 9 வடிவில் தோன்றினாள்.
அகோர வீரபத்திரரும், பத்ரகாளியும் சிவபார்வதியை வணங்கினார்கள். சிவபெருமான் இவர்களிடம், ""நீங்கள் இருவரும் தட்சனிடம் அவிர்ப்பாகம் கேளுங்கள். தராவிட்டால் அவனை அழித்துவிடுங்கள்,'' என உத்தரவிட்டார்.

சிவனின் உத்தரவின்படி வீரபத்திரர் தட்சனிடம் அவிர்பாகம் கேட்டார். தட்சன் வீரபத்திரரை அவமானப்படுத்தி விட்டான். பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் வீரபத்திரர் நியாயம் கேட்க, அவர்கள் தட்சனுக்கு பயந்து அமைதியாக இருந்தனர்.

கோபம் கொண்ட வீரபத்திரர் அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் தாக்க, பத்ரகாளி பெண்களை தாக்கினாள். தட்சனோ சாகாவரம் பெற்றவன். வீரபத்திரர் அவனது தலையை வெட்டவும், தலை தனியாக யாகத்தில் போய் விழுந்தது. தட்சனின் தந்தையாகிய பிரம்மனின் வேண்டுதலால் அருகிலிருந்த ஆட்டின் தலையை வைத்து தட்சனை உயிர்ப்பித்தார். அப்படியிருந்தும் வீரபத்திரரின் கோபம் தணியவில்லை.

சிவனிடம் இனி தன் கோபம் தீர வழி கேட்க, ""தெற்கேயுள்ள அனுமந்தபுரத்தில் வெற்றிலை தோட்டம் உள்ளது. அங்கு அமர்ந்தால் உன் கோபம் தணிந்து விடும்,'' என்று கூறினார். தட்சனும் வீரபத்திரருடன் செல்வதாக சிவனிடம் கூறினான். வீரபத்திரரும் இங்கு வந்து சாந்த சொரூபியாக அமர்ந்தார். அப்போது இங்கு தங்கியிருந்த துர்தேவதைகள் ஓடின.

நன்றி: தினமலர்

8.14.2005

தீவிரவாதிகளுக்கு செக்

விமானங்கள் கடத்தப்பட்டால் அவற்றைச் சுட்டுத்தள்ள மத்திய மந்திரி சபை முடிவு

தீவிரவாதிகளால் விமானங்கள் கடத்தப்பட்டால், அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதைவிட, கடத்தப்பட்ட விமானங்களையே சுட்டுத்தள்ள இந்தியா அதிரடியாக முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இத்தகைய கடத்தல் நாடகங்கள் மேற்கொள்வதை தீவிரவாதிகள் கைவிடக்கூடும் என்று நம்பப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய விமானம் ஒன்று ஆப்கானுக்கு கடத்தப்பட்டு, தீவிரவாதிகளின் நிபந்தனைகளுக்கு இந்தியா அடிபணிந்து அவமானப்பட்டது நினைவிருக்கலாம்.

நன்றி: சன் செய்திகள்

8.13.2005

கதையை விட தத்துவமே முக்கியம்

* பக்குவப்படாத மாமிசத்தை அப்படியே சாப்பிடுவதற்கு எவனும் விரும்ப மாட்டான். அதைப் பக்குவப்படுத்திய பிறகு தான் சாப்பிடுகிறான். அதுபோல் பெண்களின் உடல் பக்குவப்படாத மாமிசம். அதை மூடி அழகுபடுத்தி விட்டால் தான் விரும்பத்தக்கதாக உள்ளது. எனவே பெண்களின் அலங்காரங்களில் மயங்கக்கூடாது.

* சிற்றின்பத்தில் உள்ள ஆசையை விலக்குவதை விடப் பேரின்பத்தில் ஆசையை வளர்ப்பதே முக்கியம். ஏனெனில், பேரின்பத்தில் ஆசை வளர வளரச் சிற்றின்பத்தில் உள்ள ஆசை தானே அடங்கிவிடும்.

* மிதமான ஆகாரம், மிதமான நித்திரை, மிதமான பேச்சு, மிதமான உழைப்பு இவைகளுக்கு நியமம் என்று பெயர். நியமம் இல்லாதவனுக்கு யோகம் பலிக்காது. இரு கரைகளினால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு ஆறுதான் கடலை நோக்கி செல்ல முடியும். கரை உடைந்த ஆறு கடலை அடைய முடியாமல் சிதறிப் போய் விடும். அதுபோல் நியமத்துடன் கூடியவன் தான் தனது யோகத்தின் லட்சியத்தைப் பெற முடியும். நியமம் இல்லாதவன் யோக மார்க்கத்தில் சிதறிப் போவான்.

* புராணங்களில் தத்துவத்தை தள்ளிவிட்டு கதைகளை மட்டும் படிப்பவர்கள் பழத்தின் சுவையைத் தள்ளிவிட்டுத் தோலை மட்டிலும் சாப்பிடுபவர்களைப் போல் ஆவார்கள். ஆரஞ்சுப்பழத்தின் சாறை பிழிந்து கொண்டு சக்கையை தள்ளிவிடுவது போல் புராணங்களில் தத்துவத்தை உணர்ந்து எடுத்துக் கொண்டு கதைகளை தள்ளி விட வேண்டும்.

* ஒரு மடாதிபதியின் மனதை விட கிருஹஸ்தனின் மனம் தூய்மையாக இருக்கும். ஒரு பண்டிதரின் மனதை விட படிக்காத மூடனின் மனம் தூய்மையாக இருக்கும்.

—கிருஷ்ணப்ரேமி சுவாமி

நன்றி: தினமலர்

8.12.2005

கவிதை (என்னுடையதல்ல!)

தாதி தூது தீது
தத்தை தூதொத் தாது

பொருள்:
பணிப்பெண்ணிடம் தூது சொல்வது தீமையில் முடியும்.
கிளி தூதை சரிவர சொல்லாது....

என் கல்லூரி நாட்களில் தமிழாசான் அவர்கள், உலகின் எந்த மொழியிலும் காணமுடியாத கவிதை அமைப்பு இது. ஒரு எழுத்தை மட்டும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்ற பீடிகையுடன் ஆறு அல்லது எட்டு அடி கவிதையைக் கூறினார். இரண்டு அடி மட்டும் நினைவில் உள்ளது. இணைய நன்பர்கள் எவரேனும் அறிந்தால் பின்னூட்டமிடவும்.

8.11.2005

கிருஷ்ண லீலை - 2

காளிங்க நர்த்தனம்:
ஒரு முறை கிருஷ்ணர் தன் நண்பர்களுடன் காளிங்க மடுவுக்கு (குளம்) அருகில் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
காளிங்க மடு ஆழமான குளம். அது குடிநீருக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த குளம்.
இந்த குளத்தில் காளிங்கன் என்ற அசுரன் பாம்பு வடிவில் வந்து குளத்திற்கு அடியில் வந்து தங்கிவிட்டான். அங்கு குளிக்க வருபவர்களையும், நீர் எடுக்க வருபவர்களையும் பிடித்து விழுங்கி வந்தான்.
காளிங்கன் வந்து தங்கி இருந்ததால் அந்த மடுவுக்கு காளிங்க மடு என்ற பெயர் வந்துவிட்டது.
அந்த மடுவை உபயோகிப்பதையே மக்கள் நிறுத்திவிட்டனர்.
அந்த மடுவிற்கு அருகில்தான் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் கிருஷ்ணர்.
திடீரென பந்து பறந்து சென்று காளிங்க மடுவிற்குள் விழுந்து விட்டது. உடனே பந்தை எடுக்க காளிங்க மடுவிற்குள் இறங்கினார் கிருஷ்ணர். பதறிப் போனார்கள் நண்பர்கள்.
உள்ளே அசுரன் இருக்கிறான் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று கதற ஆரம்பித்தனர். அவர்கள் குரல் கேட்டு ஆயர்பாடி முழுவதும் காளிங்க மடுவின் அருகே கூடிவிட்டது.
சற்று நேரம் கழித்து ரத்தம் மேலே வந்து மடுவின் மேற்புறம் நீர் முழுவதும் சிகப்பாக மாறத் தொடங்கியது. எல்லோரும் பயந்து போனார்கள். கிருஷ்ணரைத்தான் காளிங்கன் கொன்றுவிட்டான் என்று வருந்தி அழத் தொடங்கினார்கள்.
ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே காளிங்க பாம்பின் வாலை தன் ஒரு கையில் பிடித்தபடி அதன் தலை மேல் நர்த்தனமாடியபடியே மடுவிற்கு மேல் வந்தார் கிருஷ்ணர். பாம்பு வடிவில் இருந்த அசுரனும் கொல்லப்பட்டான்.
காளிங்கனை கொன்று அதன் மேலே நர்த்தனமாடி வந்ததால் அதற்கு 'காளிங்க நர்த்தனம்' என்று பெயர்.
காலம் கடந்தது. தன் கடமையை உணர்ந்தார் கிருஷ்ணர். கம்சனை கொல்ல வேண்டிய காலம் வந்தது. மதுரா சென்றார் கிருஷ்ணர். அங்கு கம்சனுடன் நேருக்கு நேர் போரிட்டு அவனை அழித்து தன் தாய் தந்தையை விடுவித்தார்.

நன்றி: தட்ஸ் தமிழ்

8.08.2005

கிருஷ்ண லீலை 1

கிருஷ்ணனின் லீலைகள் எண்ணிலடங்காதவை.

வெண்ணிலவு மின்னிடும் கன்னியர் கண்களில் தன் முகம் கண்டு கோபியர்களுடன் அவன் செய்த லீலை காதல் லீலை. அநீதியை அழிக்க அவன் செய்த லீலை அநீதி சம்ஹார லீலை என லீலைகள் கணக்கில் அடங்காதவை.

கிருஷ்ணருக்கு வெண்ணெய் மீது அளவிட முடியாத ஆசை. ஒவ்வொரு வீடாக சென்று வெண்ணெய் திருடி சாப்பிடுவது அவரது தினசரி பொழுது போக்குளில் ஒன்று.
ஒரு முறை கிருஷ்ணர் வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவரை உரல் ஒன்றில் கட்டிப் போட்டார் யசோதா. கிருஷ்ணர் அந்த உரலை இழுத்துக்கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அவர் வீட்டுக்கு எதிரே இரண்டு மரங்கள் இருந்தன. அந்த மரத்திற்கு இடையே உரலுடன் கிருஷ்ணர் செல்லும் போது அந்த மரங்களில் உரல் மோதியதில் இரண்டு மரங்களும் உடைந்தன. இரண்டு மரங்களும் உடனே தேவர்களாக மாறின.
அவர்கள் பெயர் நள சகோதரர்கள். அவர்கள் ஒரு சாபம் காரணமாக மரமாக சபிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சாபப்படி விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுக்கும் போது அவர்கள் சாபத்தில் இருந்து விமோசனம் அடைவார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி அவர்கள் இப்போது சாப விமோசனம் பெற்று கிருஷ்ணரை வணங்கி சென்றனர்.
கிருஷ்ணரின் அவதார நோக்கம் அநீதியை அழிக்க வேண்டும் என்பது.

பூதகி சம்ஹாரம்:

கிருஷ்ணரைக் கொல்ல ஆயர்பாடிக்கு பூதகி என்ற அரக்கியை அனுப்பி வைத்தான் கம்சன். அவள் கிருஷ்ணரை தேடி அயர்பாடியில் சுற்றி வந்தாள். ஒரு முறை நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணரை அவள் தூக்கிச் சென்றுவிட்டாள்.

கிருஷ்ணருடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்கள் பயந்து போய் நந்தகோபனிடம் போய் இந்த விஷயத்தைக் கூறினர். பயந்து போன நந்தகோபன் கிருஷ்ணரைத் தேடி ஓடினார். குழந்தையை பூதகி காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்றதாக கிருஷ்ணரின் நண்பர்கள் கூறியதால் காட்டுப்பகுதி நோக்கி ஓடினார் நந்தகோபன். அப்போது ஒரு பெண்ணின் மரண ஓலம் பலக்க கேட்டது.

அந்த பக்கம் நோக்கி ஒடினார் நந்த கோபன். அங்கு பூதகி மரணமடைந்து கிடந்தாள். பூதகி கிருஷ்ணருக்கு தன்னிடமிருந்த விஷப்பாலை ஊட்ட முனைந்த போது அவள் உடலிலிருந்த ரத்தம் அனைத்தையும் உறிஞ்சி எடுத்துவிட்டார் கிருஷ்ணர்.
அவளை தாக்கி கொன்றும் விட்டார்
. இது பூதகி சம்ஹாரம்.

நன்றி: தட்ஸ் தமிழ்

8.07.2005

சவுந்தர்ய லஹரி (96) - அறிவு விருத்திக்கு

கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே நகவய:
ச்ரியோ தேவ்யா: கோ வா ந
பவதி பதி: கைரபி தநை:
மஹாதேவம் ஹித்வா தவ
ஸதி ஸதினா மசரமே
குசாப்யா மாஸங்க: குரவக
தரோ ரப்யஸூலப:

பொருள்: பார்வதி அன்னையே! பிரம்மனின் மனைவியும், கல்விக்கரசியுமான சரஸ்வதியின் அருள் பெற்று இப்பூமியில் எத்தனையோ பேர் உள்ளனர். அவளை வசப்படுத்தி பெற்ற கல்வியால், செல்வமும் பெற்றனர். சரஸ்வதியையும், லட்சுமியையும் வசப்படுத்திய அவர்கள், உன்னை மட்டும் வசப்படுத்த இயலவில்லை. ஆனால், ஈசனாகிய சிவன் உன்னை மார்போடு அணைத்து வசப்படுத்திக் கொண்டார். இந்த ஸ்பரிசம் உன் அருகில் காலம் காலமாய் இருக்கும் மருதாணி மரத்திற்கு கூட கிட்டவில்லை.

(இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் அறிவு விருத்தியாகும்.)

நன்றி: தினமலர்

8.06.2005

ஏமாற்றாதே! ஏமாறாதே!!

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தை டைரக்டு செய்தவர் பி.வாசு. பிரபல டைரக்டரான இவரது தம்பி வித்யாசாகர். இவர் சினிமா வினியோகஸ்தராக உள்ளார். நேற்று முன்தினம் காலையில் இவர் தனது நண் பர்கள் மகேந்திரன், நடராஜன், ஆகியோருடன் சென்னை நுங் கம்பாக்கம் "காலேஜ்" ரோட் டில் காரில் சென்று கொண்டிருந்தார்.

ரோட்டின் ஓரம் இளநீர் கடை இருந்தது. அங்கு காரை நிறுத்தி இளநீர் வாங்கி குடித்தனர். இரண்டு பேர் இளநீர் கடை அருகே நின்று இளநீர் குடித்த னர். ஒருவர் காரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது 8 வயது சிறுவன் ஒருவன் நைசாக கார் அருகே வந்தான். அவன் காரில் இருந்தவரிடம், கீழே 10 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடக்கிறது. உங்களுடையதா? என்று பாருங்கள் என்று கூறினான். காரில் இருந்தவர் உடனே கீழே இறங்கி, 10 ரூபாய் நோட்டுகளை பொறுக்க ஆரம்பித்தார். ஐந்து 10 ரூபாய் நோட்டுகள் கிடந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு மீண்டும் காருக்குள் ஏறினார்.

இதற்குள் காருக்குள் இருந்த பெட்டியை காணவில்லை. பெட்டிக்குள் ரூ.5 லட்சம் பணம் இருந்தது. காரின் அருகில் நின்று கொண்டிருந்த சிறுவனையும் காணவில்லை. அவன்தான் 10 ரூபாய் நோட்டு களை ரோட்டில் போட்டு கவனத்தை திசை திருப்பி, காரில் இருந்த ரூ.5 லட்சம் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் போலீ சில் புகார் செய்யப்பட்டது.

நன்றி: தினத்தந்தி

வெங்காயத்தின் கருத்து: நம்முடைய பணம் சாலையில் கிடந்தால் அது நமக்குத் தெரியாமலா போய்விடும்? தெரியும் என்றால் அடுத்தவன் பணம் நமக்கெதற்கு? தெரியாதென்றால் அது நம்முடையதுதானா என்பதை உறுதி செய்து கொண்டிருக்கலாம் அல்லவா?

8.05.2005

"நியூ" படத்திற்கு தடை

சென்ற வருடம் வெளிவந்து தடபுடலாக ஓடிய நியூ படத்திற்கு இன்று சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் கற்பக விநாயகம் மற்றும் அசோக் குமார் ஆகியோர் இந்தத் திரைப்படைத்தை பார்வையிட்ட பின்னர் அதற்கு தடை விதித்ததுடன் ஆபாசமாக படம் எடுத்த அதன் இயக்குநர் S.J. சூர்யாவுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.

படம் வந்து அனைத்து பகுதியிலும் சக்கைபோடு போட்டு, படம் பெட்டிக்குள் போன பிறகு இப்படி ஒரு தீர்ப்பு தேவையா? இந்த படம் வெளிவந்தவுடன் இடைக்கால தடை போட்டு, மிக விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கியிருக்கலாமே? சாட்டிலைட் சேனல்களில் இந்த படத்தைவிட மிக ஆபாசமான காட்சிகள் வருகின்றனவே! விளம்பரங்களில் ஆபாசக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்களுடன் வருகின்றனவே! இவற்றுக்கெல்லாம் பதில்?

“தமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்” என்று யாரோ சொன்னது இப்பொழுது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

குறிப்பு: நான் "நியூ" படத்திற்கு ஆதரவாகவோ அல்லது அதற்கு எதிராகவோ எழுதவில்லை. இந்தியாவில் நீதி தாமதப்படுத்தப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

8.03.2005

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்

என்ன விசேஷம் இந்த ஆடி பதினெட்டுக்கு?

18ஐக் கூட்டினால் 9. ஒன்பது என்பது நல்ல எண் என சொல்லுவார் ஒரு எண்ணிக்கை நிபுணர். ஆனால், பதினெட்டின் சிறப்பும், இந்த நாளில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதன் காரணமும் தெரியுமா?

பார்வதிதேவி ருதுவான மாதம் ஆடி. ஆடி முதல் தேதியில் வயதுக்கு வந்ததாகச் சொல்வதுண்டு. வயதுக்கு வந்த பெண்களை இக்காலத்தில் தீட்டு என்ற காரணத்துக்காக 16 நாட்கள் வரை வீட்டிலிருந்து விலக்கி வைப்பார்கள். அக்காலத்தில் 18 நாட்கள் விலக்கி வைத்துள்ளனர். அதன்பிறகு 'சடங்கு' என்ற இனிய நிகழ்ச்சியை நடத்துவர். பார்வதிதேவி வயதுக்கு வந்த பதினெட்டாவது நாளே ஆடிப்பெருக்கு ஆகும். இந்நாளில் நீர்நிலை கரைகளில் மக்கள் குடும்பத்துடன் சேர்ந்து 'கூட்டாஞ்சோறு' சமைத்து உண்பர்.

ஆடிப்பெருக்கு விழாவை காவிரி தாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக குடும்ப பெண்கள் காவிரிக் கரையில் கொண்டாடுவது வழக்கம். 'ஆடி பெருக்கு' அன்று காவிரியில் குளிப்பது விசேஷமானது என்பதால் காலையில் பெண்கள் காவிரியில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்னர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். பூஜையில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, காவிரி உருவாகக் காரணமான விநாயகருக்கு பூஜை செய்கின்றனர். பூஜையில் தேங்காய் பாலை பொங்க பொங்க காய்ச்சி, படைக்கப்பட்ட நைவேத்யம் மற்றும் தேங்காய், வெல்லம், புளி, தயிர் சாதனங்கள் அடங்கிய சித்ரான்னம் படைக்கின்றனர்.

இக்காலத்தில் காவிரி தாய் 'மசக்கையாக' (கர்ப்ப காலம்) இருப்பதாக கருதி படைக்கப்படுகிறது. வீட்டிலுள்ள மூத்த பெண் படையலுக்கும், காவிரித் தாய்க்கும் தீபாராதனை செய்து பூஜையை நிறைவு செய்வார்.....

... சிவனின் மனைவியாக காவிரி போற்றப்படுகிறாள். கைலாயத்தில் சிவன் - பார்வதி திருமணத்தின் போது, வடபுலம் தாழ்ந்தது. இதனால் அகத்திய முனிவரை, 'தென்புலம் சென்று பூமியை சமநிலையாக்குமாறு' சிவபெருமான் பணித்தார். சிவனை திருமணம் செய்வதற்காக, பார்வதிதேவி ஒற்றைக்காலில் தவமிருந்தபோது, கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி, அகத்திய முனிவரிட்ம வழங்கினாள் பார்வதி. அவரும் அந்தப் பெண்ணை தன் கமண்டலத்தில் அடக்கி தென்னகம் நோக்கி வந்தார். அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரியானது. கமண்டலத்தில் மீதமிருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று, தான் வாசித்த பொதிகை மலையில் கொண்டுவிட அது தாமிரபரணியானது. இக்காரணத்தால் சிவபெருமானின் மனைவியாக போற்றப்படுகிறாள் காவிரி.

திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் மகேந்திர பல்லவன் காலத்து குடவரைக் கோயில் ஒன்றுள்ளது. இங்கு சடைமுடியில் கங்கையைத் தாங்கியபடி அமர்ந்திருக்கும் சிவபெருமானும், பக்கத்திலேயே பார்வதிதேவி நின்ற கோலத்தில் இருப்பதையும் தேவகணங்கள் சுற்றி இருப்பதும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
'ஏற்கனவே சடைமுடியில் இரண்டாவது மனைவியைத் தாங்கிய சிவபெருமான், மலைக்கோட்டையின் பக்திலேயே ஓடும் காவிரியின் மீதும் மோகம் கொண்டுவிடக் கூடாது' என்ற கவலையில் பார்வதி தேவி நின்றபடியே காவல் இருக்கிறாராம்.
சிவபெருமானின் மனைவியாக் கருதப்படும் காவிரியன்னை, விஷ்ணுவுக்கு தங்கையாகிறாள்....

அண்ணனின் சீர்வரிசை: சாதாரண மக்களே காவிரியன்னைக்கு பூஜைகள் செய்யும்போது, அவளது அண்ணனான 'ரங்கநாதர் சும்மாயிருப்பாரா? 'ரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று 'ரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் 'நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு ஆஸ்தானமிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

ஆடிப்பெருக்கு நாளில் நாமும் காவிரி அன்னையை வணங்குவோம். வரும் ஆண்டுகளிலாவது முன்பு போல் குதித்தோடி வர வேண்டுவோம்.

நன்றி: தினமலர்

ஆண்டாளின் வயது

ஆண்டாள் கலியுகம் பிறந்த 98வது ஆண்டில் (நள ஆண்டு) பிறந்தாள். இப்போது கலியுகம் 5106ம் ஆண்டு நடப்பதாக பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்த போது பிறந்தவர்கள் மூவர். ராமன், ராகவேந்திரா, ஆண்டாள் ஆகியோரே அம்மூவர். இவள் ஆடி மாதம் 8ம் தேதி பூர நட்சத்திரத்தில், சிம்ம ராசியில், துலாம் லக்னத்தில், வளர்பிறை பஞ்சமி திதியில், செவ்வாய்க்கிழமை பிறந்தாள். சிம்மராசி பிடிவாத குணம் கொண்டது. ஆண்டாளும் இறைவனை அடைய வேண்டும் என்ற பிடிவாதம் செய்து அவரையே அடைந்தாள். அவள் பிறக்கும் போதே அவளுக்கு ஐந்து வயது என தல வரலாறு குறிப்பிடுகிறது. இந்த வயதுடைய குழந்தையாகத்தான் பெரியாழ்வார் அவளை துளசித் தோட்டத்தில் கண்டெடுத்தார். ஆக இவ்வாண்டு அவளுக்கு 5013ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

நன்றி: தினமலர்

அவுர்வர் - பக்திக்கதை

அவுர்வர் என்ற சொல்லுக்கு தொடையிலிருந்து பிறந்தவர்' என்று பொருள். இவரைப் பெற்ற தாய் தியாகத்தின் சின்னமாகத் திகழ்ந்தவள். எல்லாரும் வயிற்றில் பத்து மாதம்தான் கருவை சுமப்பார்கள். ஆனால், இந்த தாய் இவரை நூறு வருடங்கள் சுமந்தார். வயிற்றில் இருந்தால் ஆபத்து என்பதால் தனது தொடையில் வைத்து கருவை காப்பாற்றினார் என புராணங்கள் சொல்கின்றன.

அவுர்வரின் தந்தை அப்நவாநர். பிருகு மகரிஷியின் வம்சத்தில் தோன்றியவர். மிகப் பெரிய ரிஷி. அப்நவாநர் பற்றிய தகவல்கள் புராணங்களில் அதிகமாக கிடைக்கவில்லை. பெரும்பாலும் இவர் தனிமையையே விரும்புவாராம். அதே நேரம் தவவலிமை அதிகம். மிகுந்த பொறுமை உள்ளவர் என்பதால் தன் தவவலிமையை தவறான வழியில் பயன்படுத்துவதில்லை. யாரையும் சபித்ததும் இல்லை. இவர் மீது எல்லா ரிஷிகளும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

இந்த சமயத்தில் தங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பிருகு வம்சத்தாரை சத்ரியர்கள் கொன்று குவித்துக் கொண்டிருந்னர். அப்நவாநரும் பிருகு வம்சத்தை சேர்ந்தவர் என்பதால் அவரைத் தேடி அலைந்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. பிருகு வம்ச பெண்கள் கருவுற்றிருந்தால் அவர்களைக் கொல்லவும் சத்ரியர்கள் தயங்கவில்லை.

அவுர்வரின் தாயும் கர்ப்பமானாள். அவளைக் கொல்ல சத்திரியர் படை அலைந்தது. மறைந்து வாழ்ந்த இந்த பெண்மணி தனது வயிற்றில் இருந்த கருவை தனது சக்தியாலும், பதிபக்தியாலும், குழந்தை பாசத்தாலும் தொடைக்கு கொண்டு வந்துவிட்டாள். சத்திரிய படையினரும் இவளைக் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் வயிற்றில் கர்ப்பம் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. உடையால் தொடையை மறைத்திருந்ததால் அங்கு கர்ப்பம் தங்கியிருப்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களிடம் தப்பித்த அந்த பெண் அவுர்வரை பெற்றெடுத்தாள்.

நன்றி: தினமலர்

8.01.2005

ஆன்மீக மலர் (31-07-2005)

ஏழு திரையிட்டு பூஜை நடத்தப்படும் வள்ளலார் குடி கொண்டுள்ள வடலூர் பற்றி கேள்விப்படடிருப்பீர்கள். ஆனால் இரண்டு மூன்று வினாடிகள் மட்டுமே தரிசனம் தந்துவிட்டு திரைக்குள் மறைந்து கொள்ளும் சிவன் சன்னதியைப் பார்க்க வேண்டுமானால், நீங்கள் செல்லவேண்டிய இடம், கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் ஆகும்.....

தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதாசர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது......

இறைவனும் இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11 ருத்ரர்களில் ஒருவரான ''பீமருத்ரர்'' திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை.

நன்றி: தினமலர் (ஆன்மீக மலர் 31-07-2005)